Published : 21 Feb 2022 04:39 PM
Last Updated : 21 Feb 2022 04:39 PM
சென்னை: "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநிலத் தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டது" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஆளும் திமுகவின் கோர முகத்தை வெளிப்படுத்தியது. திமுகவின் இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லாம் இந்தத் தேர்தல் விஞ்சியது.
கரோனா நோயாளிக்கு என்று வரையறுக்கப்பட்ட மாலை நேரம் 5-ல் இருந்து 6 மணிவரை கள்ள ஓட்டுக்காக திமுகவால் திட்டமிடப்பட்டிருந்தை அறிந்து, தனி நேரம் தரப்பட வேண்டாம் என தடுத்துப் பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி கரோனா வைரஸ் நேரத்தை சமூக விரோத கும்பல் எடுத்துக் கொண்டன.
அனைத்து வாக்குப்பதிவு நிலையங்களிலும் திமுக குண்டர்கள் சரளமாக கள்ள ஓட்டை பதிவு செய்தனர். கள்ள ஓட்டு போடுவதற்கு திமுகவினர் பணம் அளித்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை. மாநில தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டது.
சேலத்தில் இடைப்பாடி கிராமத்தில், அலச்சம்பாளையம் கிராம பள்ளியில் திமுக வேட்பாளர் கணேசன் கள்ள ஓட்டு போட வைத்தது ஜனநாயகப் படுகொலை.
இந்தச் சூழலில் வாக்குப் பதிவு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்.
மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையாவது மனசாட்சியுடன் நடத்துமா அல்லது ஆளும் கட்சிக்கு துணைபோகும் அவலம் தொடருமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT