Published : 21 Feb 2022 11:56 AM
Last Updated : 21 Feb 2022 11:56 AM
திருப்பூர்: ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸார் அனுமதி மறுத்ததால் சாமியானா பந்தல் நாற்காலிகள் அமைக்க தடை. குடை பிடித்தும் தலையில் துண்டை போர்த்தியும் போராட்டம்.
அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியும் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் என 5 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீதமும் என உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து பல்லடம், மங்கலம், 63.வேலம்பாளையம் உள்ளிட்ட 4 சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விசைத்தறியை இயக்கி வருகின்றனர்.
சோமனூர் உள்ளிட்ட 5 சங்கங்கள் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று காலை 10 மணி முதல் காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்க தடை விதித்தனர். இதனையடுத்து சாலையோரம் அமர்ந்து தலையில் துண்டை போர்த்தியும், குடை பிடித்தும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT