Published : 21 Feb 2022 10:54 AM
Last Updated : 21 Feb 2022 10:54 AM

நெல் கொள்முதல், நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவும்: ஜிகே வாசன் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் ஏழை, எளிய மக்களின் நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் பிரதான தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. குறிப்பாக விவசாயத் தொழிலைப் பாதுகாக்க விளைந்த, அறுவடையான நெல்லை கொள்முதல் செய்து, பாதுகாத்து, விற்பனைக்கு கொண்டு சென்று, உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிக்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதையும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவ்வப்போதே வழங்கப்படவில்லை என்பதையும் சரி செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் பணிகள் தடையில்லாமல், போதுமான பணியாளர்களை கொண்டு நடைபெறவும், நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படவும், பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அவ்வப்போதே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ரேஷன் அரிசி வெளிச்சந்தையில் விற்கப்பட்டு மீண்டும் ரேஷன் கடைகளுக்கு மறு சுழற்சியாக வருவது முறையில்லை. இது தவிர்க்கப்பட்டு தரமான அரிசியை வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தரமானதாக, சமையலுக்கு பயன்படுத்த ஏதுவாக நல்லெண்ணெயாக வழங்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரேஷன் பொருட்களை பெரும்பாலும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் வாங்குகிறார்கள்.

பொது விநியோகத் திட்டத்தின்படி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் பொருட்களை வாங்க வரும் மக்களுக்கு அனைத்துப் பொருட்களும் ஒரே சமயத்தில் கிடைக்க ஏதுவாக பொருட்கள் இருப்பில் இருக்க வேண்டும். வழங்கும் பொருட்களின் எடை குறையாமல், சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

அரிசி உட்பட எந்த ஒரு ரேஷன் பொருளும் தட்டுப்பாடில்லாமல், மக்களை அலையவிடாமல் கொடுக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சந்தேகத்திற்கும் உட்படாத வகையில் பொது விநியோகத்திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு ஏதுவாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x