Last Updated : 21 Feb, 2022 09:47 AM

 

Published : 21 Feb 2022 09:47 AM
Last Updated : 21 Feb 2022 09:47 AM

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறு வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குகள் பதிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டில் இன்று நடைபெறும் மறு வாக்குப்பதிவையொட்டி வாக்கை செலுத்த வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டில் இன்று (பிப் 21) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 21 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 28,042 வாக்காளர்களில் 21.435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த மாவட்ட நிர்வாகமும், ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகமும் முழு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வார்டில் பிரதான கட்சிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அதிமுக வேட்பாளராக மலர்விழி இரட்டைஇலை சின்னத்திலும், பாமக வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளராக ரோஸ்மா பிரசர்குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலெட்சுமி மறைமுருக்கி(ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் என 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஸ்டேட்பேங்க் காலனி, சீனிவாசாநகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம்ரோடு, கல்விகிராமம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 16வது வார்டில் 1,640 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,034பேர் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயலெட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மறைமுருக்கி (ஸ்பேனர் சின்னம்) தபால் வாக்குச்சீட்டுகளில் திருகாணி சின்னமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மறைமுருக்கி (ஸ்பேனர்) சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்புகார் தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளதால் இவ்வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய (வடக்கு) தொடக்கப்பள்ளியில் மறுவாக்குப்பதிவு நடத்திடவும், காலை 7மணிமுதல் மாலை 5 மணி வரை பொதுவாக்காளர்களும், மாலை 5மணி முதல் 6மணிவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களும் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையர் சுபாஷினியும் செய்துள்ளனர்.

மேலும், ஜெயங்கொண்டம் நகராட்சி 16வது வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இன்று நடைபெறும் மறுவாக்குப்பதிவு குறித்த தகவல்களை கொண்டு சேர்க்கும் பணிகள் நேற்று முழுவீச்சாக நடைபெற்றது.

இதனிடையே, மறுவாக்குப்பதிவு நடைபெறும் ஜெயங்கொண்டம் 16 வது வார்டில் உள்ள பள்ளிகள்,தனியார் நிறுவனங்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஆட்சியர் விடுப்பு அளித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. இதையடுத்து வாக்களர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x