Published : 20 Feb 2022 07:42 PM
Last Updated : 20 Feb 2022 07:42 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (பிப்.20) நடைபெற்ற திருமண விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் கொண்டு வந்து சீர் அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரைக் கொண்டு “தமிழினி” வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினந்தோறும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாட்ஸ்அப் குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழினி வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தி தலைமையில் 9 மாட்டு வண்டிகளில் கல்யாண சீர் கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொரு வண்டியிலும் திருவள்ளுவர், ஒளவையார், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகிய தமிழறிஞர்களின் படங்கள் மற்றும் அவர்களது படைப்புகளை ஏற்றிக் கொண்டு வரப்பட்டது. மண்டப வாசலில் இறங்கி இவற்றோடு, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளோடு தட்டுகளில் வைத்து சீர்வரிசை அளிக்கப்பட்டது. இவ்வாறு திருமண விழாவில் தமிழறிஞர்கள் போற்றப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT