Published : 20 Feb 2022 01:10 PM
Last Updated : 20 Feb 2022 01:10 PM

அதிமுக வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: அதிமுக முகவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லுகள் ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: "தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று முடிந்துள்ள நிலையில், 22.2.2022 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கழகத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:
> வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.2.2022 அன்று, அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட வேண்டும்.

> வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி உள்ளனவா என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

> வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

> பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

> வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம், தபால் வாக்குகளில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து, தபால் வாக்குகள் எண்ணி முடித்து அறிவிக்க வேண்டும். அதன் பிறகு தான், மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

> மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், அந்த வார்டின் முடிவை வெளியிட்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கிய பிறகு தான், அடுத்த வார்டின் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

> ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

> வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீர்வினைக் காண வேண்டும்.

> திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளையும்; தற்போதைய நடைபெற்று வரும் நிகழ்வுகளையும் உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லுகள் ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

> அதிமுகவின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.

> அதிமுகவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agent) அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும்.

> வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் / மாவட்டத் தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பில் சீலிடப்பட்டு வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதிமுகவின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x