Published : 15 Apr 2016 02:35 PM
Last Updated : 15 Apr 2016 02:35 PM
திருநங்கைகளை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மதுரை நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை ஏப். 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனு:
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, கடந்த 2.4.2016-ல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட அனுபவம் இல்லாதவர்கள், அவர்கள் உடனடியாக எம்.பி, எம்எல்ஏ ஆக ஆசைப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் குஷ்பு திருநங்கைகளை இழிவுபடுத்தியுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக எம்பி தேர்தலில் போட்டியிட்ட ஒரே திருநங்கை நான். என்னை சுட்டிக்காட்டியே குஷ்பு பேட்டியில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமூக நலனுக்காக திருநங்கைகள் எவ்வித பாகுபாடு இல்லாமல் போராடி வருகின்றனர். அப்படியிருக்கும் போது திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட போதிய அனுபவம் இல்லை என்று குஷ்பு கூறியது சட்டவிரோதம். திருநங்கைகள் சமுதாயத்தை கேவலப்படுத்தும் விதமாகவும் அவரது கருத்து அமைந்துள்ளது.
நடக்கவிருக்கும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சிகளில் சீட் கேட்டு திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். பலர் சுயேட்சையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அப்படி தேர்தலில் போட்டியிடும் திருநங்கைகள் பொதுமக்களிடம் வாக்கு பெற்றுவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது.
குஷ்புவின் பேட்டியால் சமுதாயத்திலும், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியிலும் திருநங்கைகளுக்கு அவமானம், தலைகுனிவு, மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியது மற்றும் பெண்களின் கற்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக குஷ்பு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார் குஷ்பு. இதனால் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, குஷ்பு மீது இ.பி.கோ 499 (ஒருவரின் புகழுக்கு கேடு விளைவித்தல்), 500 (அவதூறு), 501 (அவதூறுக்கு ஆளாகும் நபரை சுயநலனுக்கு பயன்படுத்தல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதித்துறை நடுவர் சபீனா முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.முத்துக்குமார், எஸ்.மோகன்தாஸ் வாதிட்டனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நடுவர், அடுத்த விசாரணையை ஏப். 25-க்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT