Published : 19 Feb 2022 10:56 PM
Last Updated : 19 Feb 2022 10:56 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு: சில சலசலப்புகள்... பெரும்பாலும் அமைதி... - ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் சலசலப்புகள் அரங்கேறிய நிலையில், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவுக்குப் பின், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வரும் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் - மாவட்ட வாரியாக: அரியலூர் - 75.69%, செங்கல்பட்டு - 37.99%, சென்னை - 41.68%, கோயம்புத்தூர் - 56%, கடலூர் - 57.58%, தர்மபுரி - 65.68%, திண்டுக்கல் - 57.84%, ஈரோடு - 54.88%, கள்ளக்குறிச்சி - 61.07%, காஞ்சிபுரம் - 52.88%, கன்னியாகுமரி - 50.44%, கரூர் - 63.56%, கிருஷ்ணகிரி - 52.61%, மதுரை - 42.70%, மயிலாடுதுறை - 51.97%, நாகப்பட்டினம் - 54.15%, நாமக்கல் - 64.19%, பெரம்பலூர் - 55.58%, புதுக்கோட்டை - 57.37%, ராமநாதபுரம் - 65.06%, ராணிப்பேட்டை - 54.53%

சேலம் - 56.37%, சிவகங்கை - 62.73%, தென்காசி - 58.05%, தஞ்சாவூர் - 52.08%, தேனி - 55.71%, நீலகிரி - 62.68%, தூத்துக்குடி - 49.35%, திருச்சி - 57.09%, திருநெல்வேலி - 48.23%, திருப்பத்தூர் - 49.21%, திருப்பூர் - 45.52%, திருவள்ளூர் - 48.98%, திருவண்ணாமலை - 54.81%, திருவாரூர் - 56.20%, வேலூர் - 62.21%, விழுப்புரம் - 60.14%, விருதுநகர் - 67.93%.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் எந்த சர்ச்சைகளும், அசம்பாவிதங்களுமின்றி வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இயந்திர கோளாறுகள் ஏற்பட்டன. சில இடங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை அடைவதில் சிரமம் ஏற்பட்டது.

இயந்திரக் கோளாறு: திருப்பூர் மாநகராட்சி 42 - வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 406 - வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு துவங்குவதில் தாமதம் உண்டானது. பின்னர் புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குக்கு செல்போன் பரிசு: கரூர் மாநகராட்சி 38-வது வார்டான தாந்தோணிமலையில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வாக்குச்சாவடிகள் மாற்றம்: தமிழகத்தின் பல இடங்களில் வார்டுகள் மறு வரையறையின் காரணமாக பலரின் வாக்குச்சாவடிகள் மாறியிருந்தது. இந்த விவரங்கள் தெரியாதவர்கள் பழைய வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களுக்கு வாக்குகள் இல்லை என்று குழம்பிச் சென்ற நிகழ்வுகள் நடந்தேறின.

வாக்குச்சாவடி சம்பவங்கள்:

* மதுரை மேலூர் வாக்குச்சாவடி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த முகவர் கைது செய்யப்பட்டார். | விரிவாக வாசிக்க > வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு... பாஜக முகவர் வெளியேற்றம்... - மதுரை மேலூரில் நடந்தது என்ன?

* தமிழக அளவிலான சலசலப்புகளில் கோவையே அதிகம் கவனிக்க வைத்தது. திமுகவினர் பரிசுப் பொருள் விநியோகித்ததாக தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. | விரிவாக வாசிக்க > கோவை: திமுகவினர் பரிசுப் பொருள் விநியோகித்ததாக தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போராட்டம்

* திருவண்ணாமலையில் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சரின் மகன் மற்றும் அவரது ஆதவாளர்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அதிரடியாக வெளியேற்றினார். | விரிவாக வாசிக்க > திருவண்ணாமலை வாக்குச்சாவடியில் அத்துமீறிய அமைச்சர் மகன்: அதிரடி காட்டி வெளியேற்றிய தேர்தல் பார்வையாளர் சங்கீதா!

கரூர் மாநகராட்சி 12-வது வார்டு வாக்குச்சாவடி மையமான வடக்கு பசுபதிபாளையத்தில் தனது பெயரில் போலி வாக்குப் பதிவான ஆத்திரத்தில் பிற வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் 2 மணி நேரம் போராட்டம் செய்தார். படிவம் மூலம் வாக்களிக்க அதிகாரிகள் வற்புறுத்தியும் அவர் விடாமல் போராட்டத்தை தொடர்ந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. | விரிவாக வாசிக்க > என் பெயரில் ஓட்டு போட்டது யார்? - கரூரில் வாக்காளர் போராட்டத்தால் 2 மணிநேரம் தடைபட்ட வாக்குப்பதிவு

குடிபோதையில் ரகளை: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அமைக்கப்பட்டுள்ள 90-வது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 445 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், பிற்பகல் 2 மணியளவில் திடீரென பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அப்போது வாக்குப்பதிவு செய்ய வரிசையில் காத்திருந்த வாக்காளர்களிடம் குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. | விரிவாக வாசிக்க > இயந்திரம் கோளாறு, குடிபோதையில் ரகளை... - வேலூர் வாக்குச்சாவடியில் இரண்டரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x