Published : 02 Apr 2016 02:50 PM
Last Updated : 02 Apr 2016 02:50 PM
தென்பெண்ணையாறு - படேதலாவ் ஏரி திட்டம் நிறைவேற்றித் தருவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே விவசாயிகள் தங்களது ஆதரவினை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரியை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வந்தது. ஆனால் தற்போது அந்த ஏரி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் இந்த ஏரியின் தண்ணீரை நம்பி இருந்த விவசாயிகள் தற்போது விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், படேதலாவ் ஏரிக்கு வேப்பனப்பள்ளி வழியாக வரும் மார்கண்டேயன் நதியில் மாரச் சந்திரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் விவசாயம் நடந்து வந்தது. இதனை நம்பி இந்த ஏரியில் இருந்து காட்டிநாயனப்பள்ளி, கம்மம்பள்ளி, கள்ளுகுறிக்கி, ஐகுந்தம் கொத்தப்பள்ளி, காட்டாகரம் ஆகிய ஊராட்சிகளில் 95 ஏரிகள் மற்றும் மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் உள்ள ஏரிகளை இணைக்கும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டது.
ஆனால் மார்கண்டேயன் நதி வறண்டு போனதால் படேதலாவ் ஏரிக்கு வரும் தண்ணீரும் இல்லாமல் போய்விட்டது.
இதனை தொடர்ந்து தென் பெண்ணை ஆற்றிலிருந்து - படே தலாவ் ஏரியை இணைக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இக்கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி படிவத்தில் கையெழுத்து இடும் வேட்பாளருக்குகே தங்களது ஆதரவினை அளிக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தென் பெண்ணையாறு - படேதலாவ் ஏரி இணைப்பு திட்ட குழுவின் செயலாளரும், ஒருங்கிணைப் பாளருமான சின்னேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (46) கூறியதாவது:
தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள எண்ணேகோல் அணைக்கட்டில் ஏற்கெனவே இடது புறத்தில் 2 கி.மீ தூரத்திற்கும், வலது புறத்தில் 1.78 கி.மீ தூரத்திற்கும் கால்வாய்கள் உள்ளது. இடதுபுறக்கால்வாயிலிருந்து புதிய கால்வாய் வெட்டி குருபரப்பள்ளி, ராகிமானப்பள்ளி, போலுப்பள்ளி, கள்ளுக்குறுக்கி வழியாக படேதலாவ் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தை தான் முன்வைத்து ஓட்டு கேட்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பின் இது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
தற்போது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் என மொத்தம் 31 ஊராட்சிகளில் வேட்பாளர்கள், வாக்குறுதி படிவத்தில் கையெழுத்திட வேண்டும். அவர்களுக்கு எங்களது ஆதரவினை அளிப்போம்.
இதுதொடர்பாக வருகிற 7-ம் தேதி ஏரியில் முக்கிய பிரமுகர்களுடன் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT