Published : 19 Feb 2022 04:36 PM
Last Updated : 19 Feb 2022 04:36 PM
மதுரை: தனது வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால் பேரக் குழந்தைகளுடன் வாக்களிக்க வந்த பெண் வாக்குரிமைக்காக கண்ணீர் விட்டு அழுதார். அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில், அவருக்கு டெண்டர் ஓட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி 42-வது வார்டு தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த வார்டுக்கு உட்பட்ட மதுரை தமிழன் தெரு பகுதியைச் சேர்ந்த 52 வயதான வசந்தி என்ற பெண் தனது வாக்கினை செலுத்த பேரக்குழந்தைகளுடன் ஆர்வமாக வந்திருந்தார்.
வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் சென்றபோது தேர்தல் அலுவலர்கள் வசந்தியின் வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டதாக கூறினர். அதிர்ச்சியடைந்த அவர், மிகுந்த மனவேதனையில் தனது வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கும்படி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார்.
தனது பேரக்குழந்தைகளை அவர் கையில் வைத்தபடி, தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறி கண்ணீர் மல்க முறையிட்டதால், வாக்குச்சாவடி அலுவலர்களை மனம் இறங்க செய்தது. இதையடுத்து, அவரது புகார் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தனர். பின் அவரை டெண்டர் ஓட்டு மூலம் வாக்களிக்க வைத்தனர்.
கியூவில் நின்றிருந்த வாக்காளர்கள் பாராட்டு: தனது வாக்கை மற்றவர் யாரோ போட்டு சென்றனர் என்று தெரிந்த பிறகு தனது வாக்குரிமைக்காக கடைசி வரை போராடி சட்டத்தின் மூலமாகப் பெற்று டெண்டர் முறையில் வாக்களித்த வசந்தியை வரிசையில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள் பாராட்டினர்.
வாக்களிக்க மன ஆறுதலுடன் பேரக்குழந்தைகளுடன் வசந்தி புன்சிரிப்புடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறுகையில், ''டெண்டர் வாக்கு என்பது ஏற்கெனவே வாக்களித்தவர் வாக்கும், தாளில் வாக்களித்த நபரின் வாக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தல் எண்ணிக்கையின்போது பணியில் உள்ள தேர்தல் அதிகாரி முடிவின்படி செல்லத்தக்க ஒரு வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT