Published : 19 Feb 2022 03:47 PM
Last Updated : 19 Feb 2022 03:47 PM
ஈரோடு: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் பாஜகவினர் டெபாசிட் கூட பெற மாட்டார்கள்" என முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு அக்ரஹார வீதி வாக்குச்சாவடி மையத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா மற்றும் குடும்பத்தினருடன் வந்தது வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம், முதல்வர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என வாக்காளர்கள் உணர்ந்துள்ளனர்.
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்து வரும் நிலையில், தமிழகத்தை காப்பாற்ற கூடிய வலிமையும், சக்தியும் பெற்ற ஒரே முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமிழர்களின் மானம், சுயமரியாதை, சமூகநீதி, கலாச்சாரம், மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஸ்டாலின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.
திமுக பொய்யான பிரச்சாரம் செய்வதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். அவர் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமி விரைவில் சிறை செல்லவுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்தபோது, பாஜகவினர் டெபாசிட் பெற்றனர். தற்போது தனித்து நிற்பதால், பாஜகவினருக்கு டெபாசிட் கூட கிடைக்காது" என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT