Last Updated : 19 Feb, 2022 03:36 PM

1  

Published : 19 Feb 2022 03:36 PM
Last Updated : 19 Feb 2022 03:36 PM

”கோவையின் மானப் பிரச்சனையாக மாறிவிட்டது உள்ளாட்சித் தேர்தல்” - வானதி சீனிவாசன்

கோவை: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை" என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு மாவட்ட எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று வாக்களிப்பதற்காக, காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வந்திருந்தார். அப்போது, அங்கு உள்ள வாக்குச்சாவடியில் உள்ள பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள இணையதளத்தில் பரிசோதித்த அதிகாரிகள் கோவை காந்திபுரம் 9-வது வீதியிலுள்ள கோயம்புத்தூர் மலையாளிகள் சமாஜம் பள்ளியில் உள்ள பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்று இருந்து தெரியவந்தது. உடனடியாக பெயர் இடம் பெற்றிருந்த வாக்கு மையத்திற்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியது: "நடைபெறக்கூடிய தேர்தல் என்பது கோவையின் மானப் பிரச்சனையாக மாறியுள்ளது. நம்முடைய ஜனநாயக கடமை, உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நம்முடைய ஜனநாயக கடமையை அத்தனை பேரும் நிறைவேற்ற வேண்டும்.

கோவை மாவட்டம் தமிழக அரசின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது கடந்த சில தினங்களாக கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும் வாக்காளர்களுக்கு கையில் கொடுக்காமல் வீட்டுக்குள்ளயே பணம் பரிசுப் பொருட்கள் ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டு, அதன் பின்பு அவரிடம் வாக்கு கேட்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் அதையும் மீறி நல்லவர்களுக்கும் தூய்மையான அவர்களுக்கும் வாக்களிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் இது தொடர்பாக பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தனையும் தாண்டி கோவையின் மானப் பிரச்சனையாக மாற்றப்பட்டு இருக்கக்கூடிய தேர்தல் என்பது கோவை மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

என்னுடைய தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் ஹாட் பாக்ஸ் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வாக்கு அளிக்க வைத்துள்ளனர். இது போன்று எத்தனை அத்துமீறல்களில் ஈடுபட்டு போகிறார்கள் என்பது தெரியவில்லை. காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் தாண்டி ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

இந்தத் தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியின் வார்டுகள் புதியதாக சேர்க்கப்படும் பிரிக்கப்படும், இருந்தால்கூட தேர்தல் ஆணையம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. என்னுடைய வாக்குச்சாவடி மையம் இன்னொரு பள்ளியில் காண்பிக்கிறது. அதன்பின்பு அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டியதாக உள்ளது.

எத்தனை மக்கள் பொறுமையாக வாக்கு மையத்தினை தேடிச் சென்று தங்களது வாக்கை செலுத்துவார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் அரைகுறையாக எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இந்தத் தேர்தலை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் தேர்தலில் எந்தவித கவனமும் செலுத்தவில்லை. வாக்குச்சாவடியில் கவனம் செலுத்தவில்லை. வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை. தேர்தலை நியாயமாக நடத்தலாம் என்று கவனம் செலுத்தவில்லை என்பது தற்போது தெளிவாக தெரிகிறது" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x