Published : 19 Feb 2022 12:08 PM
Last Updated : 19 Feb 2022 12:08 PM
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என புகார்கள் வந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்யவும், மாற்று இயந்திரங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 5.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 10.32%, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 11.74% என மொத்தமாக 8.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டம் - ஒழுங்கு அமைதியைப் பொறுத்தவரையில் அமைதியாக நடைபெற்று வருகின்றன. கள நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தகவல்களை அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது தொடர்பாக புகார்கள் வந்தன. 30,735 வாக்குச்சாவடிகளில், 30 முதல் 40 இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது, அவற்றை சரிசெய்தும், மாற்று இயந்திரங்களின் உதவியுடனும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என புகார்கள் வந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்யவும், மாற்று இயந்திரங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பழுதுகளை சரிசெய்யும் பணியில் 249 பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிக்காதது என இதுவரை ரூ.35 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1,031 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 1,195 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தற்போது வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும், அடுத்த சில மணி நேரங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கி விட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. வாக்குப்பதிவு இனிமேல் சூடுபிடிக்கும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT