Published : 19 Feb 2022 09:38 AM
Last Updated : 19 Feb 2022 09:38 AM
சென்னை: "பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே 4 பேர் சட்டசபைக்கு சென்றுவிட்டனர்" என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: "பொதுவாகவே மக்கள் எங்களுக்கு யாரும் பணியாற்றவில்லை, எங்களை யாருமே வந்து பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். எனவே மக்கள் வெளியே வந்து யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யார் நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து நீங்கள் வாக்களிக்கும்போதுதான், தேர்வு செய்யப்பட்டவர்களால் உதவி செய்ய முன்வர முடியும். ஆனால், வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்தால் நிச்சயமாக இது சாத்தியம் இல்லை.
வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள், நான் வாக்களித்துள்ளேன். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதமீறலாகிவிடும்.
பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே 4 பேர் சட்டசபைக்கு சென்றுவிட்டனர். எனவே, நோட்டாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதை விட தமிழகத்தில் பாஜக இல்லவே இல்லை என்று கூறி வந்தபோது நாங்கள் வெற்றி பெற்று வந்துள்ளோம். பாஜக எத்தனையாவது இடம்பிடிக்கும் என்றெல்லாம் இப்போது எதுவும் கூறமாட்டேன் அப்படி கூறினால், அது தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும்" என்றார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கடசி தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT