Published : 19 Feb 2022 07:21 AM
Last Updated : 19 Feb 2022 07:21 AM
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் தனி வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்தஆண்டு டிசம்பர் மாதத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, 56 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 56 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், பலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த 9 மீனவர்கள் கடந்த10-ம் தேதி சென்னை வந்தடைந்தனர். மீதமுள்ள 47 மீனவர்களும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத் துறை அதி காரிகள் வரவேற்றனர்.
ராமேசுவரம் மீனவர் அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களை விடுவிக்க உதவிய மத்திய அரசு, முதல்வர்மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். படகுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி உள்ளோம். எனவே, எங்களுடைய படகுகளை மீட்டுத் தர வேண்டும். இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும்போது மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி பேசி படகுகளை பெற்றுத்தர வேண்டும்.
ஜன. 25-ம் தேதி விடுதலையான நாங்கள் தற்போதுதான் நாடு திரும்பியுள்ளோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை மீட்க உரிய உதவிகளைச் செய்யவில்லை. இலங்கை சிறையில் இருந்தபோது சரியான சாப்பாடு உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் பெரும் சிரமங்களைச் சந்தித்தோம்.
தமிழகத்தைச் சேர்ந்த 44 மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
முன்னதாக, சென்னை வந்து 4 மணி நேரமாக தங்களுக்கு குடிக்கதண்ணீர் வசதி கூட செய்யவில்லை என்று கூறி வாகனத்தில் ஏற மறுத்துமீனவர்கள் விமானநிலைய தரையில் அமர்ந்தனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து அவர்களை தனி வாகனத்தில் ஏற்றி அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT