Published : 20 Apr 2016 08:56 AM
Last Updated : 20 Apr 2016 08:56 AM
தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலில் 27 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம், திமுக, அதிமுக பாணியில் தேமுதிகவும் மாவட்டச் செய லாளர்களுக்கு சீட் கொடுக்கும் வழக்கத்தை குறைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் மிகவும் முக்கியமானவர். தலைமைக்கும் தொண்டர்களுக்கும் பாலமாக செயல்படுவது இந்த மாவட்டச் செயலாளர்கள்தான். கட்சிக்கு நிதியளிப்பது முதல் மாநாடு என்றால் கூட்டம் சேர்ப்பது வரை அத்தனை பொறுப்பும் இவர் களுக்கே வழங்கப்படும். தேர்தலில் சீட் கொடுக்கும்போது, மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், கடந்த சில தேர்தல்களில் இந்த நிலைமை மாறிக் கொண்டே வருகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களில் 34 பேர் மட்டுமே மாவட்டச் செயலாளர்கள். அதேபோல திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 40 மாவட்டச் செயலாளர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. திமுகவில் 25 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியான தேமுதிகவில் அமைப்பு ரீதியாக 58 மாவட்டங்கள் உள்ளன. இதில் 90 சதவீதம் பேர் தேமுதிக ஆரம்பித்த காலம் முதலே மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 58 மாவட்டச் செயலாளர்களில் 27 பேரை மட்டுமே வேட்பாளராக அறிவித்துள்ளது. தேமுதிகவின் 31 மாவட்ட செயலாளர்
களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. இதன்மூலம், திமுக, அதிமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் கொடுப்பதை தேமுதிகவும் குறைத்துக் கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘திமுக, அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள்போல செயல்படுவர். ஆனால், தேமுதிகவில் மாவட்டச் செயலாளர்கள் எல்லா தொண்டர்களையும் போலவே எளிமையாக இருப்பர்.
மேலும், தேமுதிகவில் இளைஞரணி, கேப்டன் மன்றம், சீனியர்களான மாவட்ட அவைத் தலைவர்கள், பொருளாளர்கள் போன்றவர் களுக்கும் சீட் கொடுக்க வேண்டும் என்பதால், 27 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
ஆலந்தூர் இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வரும், தேமுதிக மேற்கு சென்னை மாவட்டச் செயலாளருமான ஏ.எம்.காமாராஜிடம் தேர்தலில் போட்டியிடாதது குறித்து கேட்ட போது, “எனக்கு விருகம்பாக்கம் தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. சென்னையில் உள்ள 4 மாவட்டங்களிலும், தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணியை மகிழ்ச்சியுடன் செய்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT