Published : 19 Feb 2022 05:47 AM
Last Updated : 19 Feb 2022 05:47 AM

கங்கைகொண்டசோழபுரம் கோயில் அருகில் புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் அருகில் அனுமதியின்றி விதிகளை மீறி கட்டப்பட்டிருந்ததால், நேற்று முன்தினம் நள்ளிரவில் பொக்லைன் மூலம் இடிக்கப்படும் கட்டிடம்.

அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் பகுதியில் புராதனச் சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு இடித்து அகற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளில் 100 மீட்டருக்கு உள்ளாக கட்டிடங்கள், சுரங்கப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளக் கூடாது. பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொள்ள இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என விதிகள் உள்ளன.

இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்து 100 மீட்டருக்குள் ஓய்வு இல்லம்(கெஸ்ட் ஹவுஸ்) ஒன்றை கட்டி வந்தார். இந்தக் கட்டிடம் கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புராதனச் சின்னப் பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்படும் கட்டிடத்துக்கு தடை விதிக்கக் கோரி, அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவது உறுதியானதால், அக்கட்டிடத்தை 2 வாரத்துக்குள் இடித்து அகற்ற அண்மையில் உத்தரவிட்டது.

மேலும், அவ்வாறு அகற் றப்படாவிட்டால் ஆட்சியர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கட்டிடத்தை இடிப்பதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைய இருந்ததால், ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் பொக்லைன் மூலம் அக்கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது. இடிக்கப்பட்ட கட்டிடத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இப்பணியின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x