Last Updated : 22 Apr, 2016 12:58 PM

 

Published : 22 Apr 2016 12:58 PM
Last Updated : 22 Apr 2016 12:58 PM

வாக்குறுதிகள் வேண்டாம்; அடிப்படை வசதிகள்தான் தேவை: மருதங்கரை மேல்பதி கிராம பழங்குடி மக்கள் வலியுறுத்தல்

பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளாக உள்ள அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென, மருதங்கரை மேல்பதி பழங்குடியின கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்டது 24 வீரபாண்டி ஊராட்சி. சின்னத்தடாகத்தை ஒட்டியுள்ள கிராமம் என்பதால், இங்கு செங்கல் உற்பத்தி மட்டுமே முக்கியத் தொழிலாக இருக்கிறது.

வீரபாண்டிபுதூரின் கடைக்கோடியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் குருடிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றன மருதங்கரை மேல்பதி, மருதங்கரை கீழ்பதி பழங்குடியின கிராமங்கள். இரு கிராமங்கள் அருகருகே இருந்தாலும், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

மலை அடிவாரத்திலிருந்து சற்றே தள்ளியிருப்பதால் கீழ்பதி கிராமத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. ஆனால், பாதுகாக்கப்பட்ட வன எல்லைக்குள் சென்றுவிடுவதால், மேல்பதி கிராமத்துக்கு கிடைத்துள்ள வசதிகள் மிகவும் குறைவு.

24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கரை மேல்பதியில், 65-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மலையின் ஆரம்பப் பகுதி என்பதால், அடுக்கடுக்காய் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளோ, சுவர் ஏதும் இல்லாமல் கற்களால் அடுக்கப்பட்டிருக்கின்றன.

நடந்து செல்ல சரியான வழித்தடம் இல்லாததால், கரடுமுரடான பாறைகளே நடைபாதையாகவும் உள்ளன. 3 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, ரூ.9.20 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து, 24 மணிநேர நீர் விநியோகத்துக்கு மின்மோட்டார், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றால் பயன் ஏதும் இல்லை.

பழமையான 2 அடி உயரத் தொட்டியில் கசிந்து விழும் நிலத்தடி நீர் தான், இந்த மக்களுக்கு குடிநீர். கால்நடைகளும் கூட இதே நீரை தான் பயன்படுத்துகின்றன.

இதுதொடர்பாக மயிலம்மாள் என்ற மூதாட்டி கூறும்போது, ‘வன எல்லை என்பதால், இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மறுக்கிறார்கள். உண்மையில், வன எல்லை என்பது பிரச்சினையே இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குறுதிகளை அளித்து செல்கிறார்கள். ஆனால், எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை’ என்றார்.

பத்ரன் என்பவர் கூறும்போது, ‘எல்லோரையும்போல் நாங்கள் வாக்களிக்கிறோம். ஆனால் ஆடு, மாடுகள் கூட வசிக்க முடியாத சிறிய கல் வீடுகளில் வசிக்கிறோம். நல்ல தண்ணீர் குடித்ததே கிடையாது. போர் தண்ணீர் தான் கொஞ்சம், கொஞ்சமாக கிடைக்கும்.

காட்டை ஒட்டிய இடம் என்பதால், பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். இந்த முறையும் வாக்குறுதியோடு நிற்காமல், தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து வீரபாண்டி ஊராட்சித் தலைவர் சசிமதன் கூறும்போது, ‘வீடுகள் கட்ட வனத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு, மாவட்ட நிர்வாக நிதி மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த நிதியுதவிகளும் கிடைப்பதில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x