Published : 18 Feb 2022 08:57 PM
Last Updated : 18 Feb 2022 08:57 PM

கோவை சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் நியமனம்: மாநில தேர்தல் ஆணையர்

சென்னை: கோவை தேர்தல் சிறப்பு பார்வையாளராக, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: "தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னர் 31,030 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் இறந்துவிட்டனர். அந்த இடங்களில் தேர்தல் நடத்தவில்லை. இதே போல், யாருமே போட்டியிடாத இடங்கள் உள்ளிட்ட 295 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பொருத்தவரை, சட்டம் ஒழுங்கை பேணி காத்தால்தான் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் உள்பட 97,882 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் 2,870 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 12,321 பேர் உள்பட 1 லடசத்து 13 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை தரப்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஆணையின்படி, வேட்புமனுதாக்கல் நடந்த இடங்களில் எல்லாம், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 268 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் வட்டார தேர்ல் பார்வையாளர்களாக 697 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையில் 3 பேர் உள்பட 41 ஐஏஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 5,960 வாக்குச்சாவடிகளில் இருந்து வெப் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திலிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

கோவைக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக, நில நிர்வாக ஆணையராக இருக்கிற நாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பின்பற்றப்படும் என்று காவல்துறை தேர்தல் ஆணையத்திற்கு உறுதியளித்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், கோவை மாநகரை பொருத்தவரை 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 125 பேர் அடங்கிய 3 சிறப்பு காவல் படையும், 58 அதிரடிப்படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து தங்கியிருந்தவர்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும், கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், காவல் ஆணையர் மற்றும் மாவட்ட எஸ்.பி சோதனையில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க வரும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ்களை காண்பித்து வாக்களிக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 1,147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 279 ரூ ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 955 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 2 கோடியே 54 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என மொத்தம், 11.89 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தால் பிடிபட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். பணம் பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூகுள் பே மூலம் பணம் பட்டுவாடா நடைபெற்றிருந்தால், ஆதாரப்பூர்வமாக அதனை எடுத்துவிடலாம்"என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று புதிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

>விரிவாக வாசிக்க: கோவையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x