Published : 18 Feb 2022 09:26 PM
Last Updated : 18 Feb 2022 09:26 PM
மதுரை; தமிழகத்தின் தொன்மை நகரம், பண்பாட்டு தலைநகரமாக திகழும் மதுரை மாநகரம் மாநகராட்சியாகி 50 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனால், நகரின் அடிப்படை வசதிகள் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்பவில்லை.
நகரின் சாலைகள், குண்டும், குழியுமாக கோடை காலத்தில் புழுதிபறந்தும், மழைக்காலத்தில் தெப்பம்போல் தண்ணீர் நிறைந்தும் நகரின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நிறைவேற்றப்பிறகு மதுரை மாநகரம், ‘சிட்னி’ நகரம் போல் ஒளிரும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கூறினர். ஆனால், கண்ட இடங்களில் குழி தோண்டிப்போட்டும், தேவையில்லாத இடங்களில் நிதிகளை கொண்டு கொட்டி இந்த திட்டதால் மதுரை பாழாகிபோனதுதான் மிச்சம். திமுகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கண்காணிக்க தவறியதால் மதுரை மாநகராட்சியின் இன்றைய மோசமான நிலைக்கு இரு திராவிட கட்சிகளுமே காரணமாகும் என்பது இங்குள்ள சமூக ஆர்வலர்களின் பார்வை.
அரசியல் பாரம்பரியமான இந்த மாநகராட்சியின் கடைசி மேயராக அதிமுகவின் விவி.ராஜன் செல்லப்பா இருந்தார். அவருடன் சேர்ந்து இதுவரை 8 பேர் மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளனர். தற்போது மாநகராட்சியின் 9-வது மேயரை தேர்ந்தடுப்பதற்கான மாநகராட்சி தேர்தல் நாளை (பிப்.19) நடக்கிறது. அதிமுக 100 வார்டுகளில் அதிக இடங்களில் போட்டியிடும் தனித்துப்போட்டியிடும் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்து திமுக 80 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதனால், திமுக, அதிமுகவுக்கு இடையே 80 வார்டுகளில் நேரடிப்போட்டி ஏற்பட்டிருக்கிறது. திமுக போட்டியிடும் வார்டுகளில் அக்கட்சி வேட்பாளர்கள் ஆளும்கட்சி ஆரவாரத்துடன் உறுதியாக தாங்கள்தான் வெற்றிப்பெறுவோம் நம்பிக்கையில் உள்ளனர்.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகர, புறநகர மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய குழுக்களை ஏற்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கட்சித் தலைமை மதுரை மாநகராட்சி வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பை பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கட்சித் தலைமை ஒப்படைத்துள்ளது. அதனால், இருவரும் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் வெற்றியை உறுதி செய்வதோடு மறைமுக தேர்தலில் திமுக மேயர் வேட்பாளர்களை வெற்றிப்பெற வைக்கவும் தற்போது அதற்கான திட்டத்துடன் தயார்நிலையில் உள்ளனர்.
திமுக அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்றால் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கம், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தெற்கு மாவட்டப்பொறுப்பாளர் தளபதி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களில் ஒருவரை மேயராக்க தீவிரமுயற்சி செய்கின்றனர். தற்போதைய நிலவரப்படி இதுவரை நடந்த பிரச்சாரம், தேர்தல் வியூகம் அடிப்படையில் ஆளும்கட்சி என்ற ரீதியில் திமுக மாநகராட்சியில் பெரும்பாலாவன வார்டுகளில் வெற்றிப்பெறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு
திமுகக் கூட்டணி குறைந்தப்பட்டசம் 60 முதல் அதிகப்பட்சம் 75 வார்டுகள் வரை வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்து அதிமுக 25 முதல் 35 வார்டுகள் வரையும், மற்ற கட்சிகள், சுயேச்சைகள் குறைந்தப்பட்சம் 2 முதல் 5 வார்டுகள் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக முந்துகிறது. ஆனாலும், திமுகவில் ‘சீட்’ கிடைக்காத நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு எதிராக ஸ்லிப்பர் செல்போல் பல்வேறு உள்ளடி வேலைகளை பார்த்துள்ளதால் வேட்பாளர்கள் பலர் திக், திக் திக் பதட்டத்துடன் இன்று வாக்குப்பதிவை எதிர்நோக்கி உள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்கள் நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தேர்தல் வியூகங்கள் வகுத்து தேர்தல் பணியாற்றி நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
வேட்பாளர்கள் அதிருப்தி
அதிமுகவில் பல வேட்பாளர்கள் ‘சீட்’ பெறும்போது தேர்தல் செலவு செய்வதாக கூறிவிட்டு பெரியளவிற்கு பணம் செலவு செய்யாமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்.
வேட்பாளர்களோ, ஒரு பைசாக கூட தேர்தல் செலவுக்கு தராமல் வெறும் கையுடன் வந்து பிரச்சாரம் மட்டும் செய்ததால் செல்லூர் கே.ராஜூ மீது அதிருப்தியில் உள்ளனர். மக்கள் நீதி மையம், பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் பிரச்சாரம் செய்து குறிப்படத்தக்க வெற்றியை பதிவு செய்ய நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாளை நடக்கும் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்யப்படும் புதிய கவுன்சிலர்கள், அவர்கள் மூலம் மறைமுக தேர்தலில் தேர்வாகும் புதிய மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்களுக்காக மாநகராட்சி மைய மண்டல அலுவலகம், மேயர், துணை மேயர் அலுவலகங்களை புதுப்பொலிவுடன் புதுப்பிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT