Published : 18 Feb 2022 02:00 PM
Last Updated : 18 Feb 2022 02:00 PM

கிராவல் மண் அள்ளிய புகாரில் ஓபிஎஸ் உதவியாளர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

சென்னை: தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய புகாரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்ளிட்ட 11 அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தேனி மாவட்டம், உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கனிம வளத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள், வருவாய்த் துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 12 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம், வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஞானராஜன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x