Published : 18 Feb 2022 01:50 PM
Last Updated : 18 Feb 2022 01:50 PM
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2022-ஆம் ஆண்டிற்கான குரூப்- 2, குரூப்-2ஏ தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பாணை வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதற்கான அறிவிப்பாணை வெளியாகும். குரூப்-2 நிலையில் 116 பணியிடங்களுக்கும், குரூப் 2- ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும்.
மார்ச் 23ஆம் தேதிக்குள் தேர்வெழுத விருப்பமுள்ளோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் மே 21ல் குரூப்- 2, குரூப் 2- ஏ போட்டித்தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெறவுள்ளது.
மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். டிசம்பர், ஜனவரியில் கலைந்தாய்வு நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
தேர்வு நேரத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இதுவரை காலை 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இனி காலையில் 9.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கும் தேர்வு நேரம் மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாகநடத்தப்படும் என்று அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் என்றும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக் கேள்விகளுடன் பொது அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கும், நுண்ணறிவு தொடர்பாக 25 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment