Published : 18 Feb 2022 07:40 AM
Last Updated : 18 Feb 2022 07:40 AM
ஆவடி: ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில், திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆவடி கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது முதல் தேர்தலைச் சந்திக்கும் ஆவடி மாநகராட்சியில், ஆவடி, பருத்திப்பட்டு, அண்ணனூர், கோயில்பதாகை, பட்டாபிராம், மிட்னமல்லி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 48 வார்டுகள் உள்ளன.
இங்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளன. மாநகராட்சியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகளில், சுமார் 50 சதவீத சாலைகள் போக்குவரத்துக்குப் பயனற்றதாக இருக்கின்றன. பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வாய்கள் இல்லாததால், அப்பகுதிகள் மழைக்காலங்களில் மிதப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இங்கு திமுக கூட்டணியில் திமுக-38, மதிமுக, காங்கிரஸ் தலா 3, விடுதலை சிறுத்தைகள்-2, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒருவர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதேபோல, அதிமுக வேட்பாளர்கள் அனைத்து வார்டுகளிலும் களம் காண்கின்றனர். பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, மநீம உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 396 வேட்பாளர்கள் போட்டியிடும் இம்மாநகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், தங்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இங்கு முக்கிய போட்டி திமுக, அதிமுக இடையேதான் உள்ளது. திமுக மற்றும் அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுபவர், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் மகனான எஸ்.என்.ஆசிம்ராஜா. இவர் வெற்றி பெற்றால் துணை மேயர் ஆவார் எனக் கூறப்படுகிறது.
இங்கு மேயர் பதவி ஆதிதிராவிடர்(பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றால் 3, 9, 21, 24 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களில் இளங்கோவன், வீரபாண்டியன், உதயகுமார், பி.பி.பெருமாள் ஆகியோரில் ஒருவர் மேயராக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
அதிமுக வெற்றி பெற்றால் 14-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான, பட்டாபிராம் பகுதியில் செல்வாக்கு உள்ள மருத்துவரான கணேசனின் மகன் டாக்டர் ராஜேஷ்குமார், 10-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான முன்னாள் கவுன்சிலர் முல்லை தயாளன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயராக வாய்ப்புள்ளது என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT