Published : 18 Feb 2022 06:33 AM
Last Updated : 18 Feb 2022 06:33 AM
வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகரில் கரோனா பெருந்தொற்றால் நலிவடைந்த தொழில் வளத்தை பதவிக்கு வருவோர் மீட்டெடுக்க வேண்டும் என்பதே வாக்காளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
வணிகத்தில் சிறந்து விளங்கும் வாணியம்பாடி நகரம் இந்திய அளவில் அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தரும் நகரமாக திகழ்கிறது. அதேபோல, ஆம்பூர் நகரமும் வணிகத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த 2 நகரங்களிலும் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி சுமார் 70 சதவீதம் பேர் உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோல் தொழில் மட்டுமின்றி அசைவ உணவு வகைகளுக்கும் வாணியம்பாடி, ஆம்பூர் சிறப்பு பெற்ற நகரமாக தமிழக அளவில் பேசப்பட்டு வருகிறது. பாலாற்றையொட்டி வாணியம்பாடியும், ஆம்பூரும் அமைந்துள்ளதால் பல ஆண்டு களுக்கு முன்பு இங்கு விவசாயம் செழித்தோங்கியது.
தண்ணீர் இல்லாமல் பாலாறு வறண்டதால் விவசாயமும் படிப்படியாக குறைந்து விட்டது. அதே போல, கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊடுருவிய கரோனா பெருந்தொற்றால் தோல் தொழிற்சாலைகளும் பெரும் சரிவை சந்தித்தன. பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஓரளவுக்கு சமாளித்தாலும், சிறு, குறு தொழிற்சாலைகள் ஆர்டர் இல்லாமல் முழுமையாக முடங்கின.
கரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதை தொடர்ந்து மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு தற்போது தோல் பொருள் உற்பத்தி சீராக நடந்து வருகிறது. கரோனாவால் நலிவடைந்த தொழிற்சாலைகளை உள்ளாட்சித் தேர்தல் மூலம் பதவிக்கு வருவோர் மீட்டெடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப் பாகவும், பிரதான கோரிக்கையாகவும் உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 36 வார்டுகளை கொண்ட வாணியம்பாடி நகராட்சியில் 220 பேர் போட்டியிடுகின்றனர். 38,572 ஆண் வாக்காளர்களும், 41 ஆயிரத்து 732 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம்பாலினத்தினர் என 80,327 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, 36 வார்டுகளை கொண்ட ஆம்பூர் நகராட்சியில் 180 போட்டியிடுகின்றனர். இந்நகராட்சியில் 49,812 ஆண் வாக்காளரகளும், 53,604 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தினர் என 1 லட்சத்து 3 ஆயிரத்து 437 வாக்காளர்கள் உள்ளனர்.
வாணியம்பாடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலை யத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும். பூங்காக்கள் பராமரிக்கப்பட வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல வழி செய்ய வேண்டும். அனைத்து தெருக் களிலும் எல்இடி பல்பு பொருத்திய தெரு மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். வாணியம்பாடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த வேண்டும்.
உழவர்சந்தை, வாரச்சந்தை மைதானத்தை நவீனப்படுத்த வேண்டும். நியூடவுன் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அதேபோல, ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரெட்டி தோப்புப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 36 வார்டுகளுக்கும் செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடம் கட்டி அதை முறையாக பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் அத்துமீறி நடந்து வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும்.
நகர் முழுவதும் குவிந்துள்ள குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து களை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும். நேதாஜி சாலை, உமர்ரோடு, பஜார் வீதி உள்ளிட்ட சாலைகள் புனரமைக்க வேண்டும் என்பதே ஆம்பூர் நகர மக்களில் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT