Published : 17 Feb 2022 08:19 PM
Last Updated : 17 Feb 2022 08:19 PM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,13,073 பேர் - டிஜிபி சைலேந்திரபாபு

படம்: வி.எம்.மணிநாதன்

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்கவால் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்கள் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் இத்தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் நடைபெற்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மேல்நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 1,343 நிலைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் பகுதிளுக்கு விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் (QRT)அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மதுபான விற்பனைகள், ஆயுதங்கள் கடத்துவது, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதை தடுக்கும் பொருட்டு 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24*7 வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் வகையில், தாலுக்கா மற்றும் ஆயுதப்படையினை சேர்ந்த 17,788 காவல் அதிகாரிகளும், 71,074 ஆண் மற்றும் பெண் காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு படையினைச் சேர்ந்த 9,020 காவலர்கள் உள்ளிட்ட 97,882 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

12,321 ஊர்க்காவல் படையினரும், 2,870 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்கள் என 1,13,073 ஆளிநர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டம் மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x