Published : 17 Feb 2022 08:05 PM
Last Updated : 17 Feb 2022 08:05 PM
மதுரை: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஏ.ரிஸ்வான் ஹூசேன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 4-வது பெரிய நகரம் திருச்சி. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சி மாநகருக்குள் வர 11 வழித்தடங்கள் உள்ளன. திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது. இதனால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகருக்குள் நுழையும் 11 வழித்தடங்களில் சமயபுரம் டோல்கேட், கம்பரசம்பேட்டை, பஞ்சப்பூர், திருவறும்பூர், அல்லித்துறை ஆகிய 5 இடங்களில் புதிதாக பேருந்து நிலையம் அமைத்தால் தேவையில்லாமல் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியும். இதனால் மாநகரில் ஒலி, புகை மாசு பெருமளவு குறையும். மாநகருக்குள் பல்வேறு பகுதிகளில் தற்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும்.
எனவே, சமயபுரம் டோல்கேட் உட்பட 5 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், இந்த பேருந்து நிலையங்களை இணைக்க புதிய பேருந்து வழித்தடங்களையும், மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பரதேஷ் உபாத்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், அரசை நீதிமன்றம் இயக்கிக் கொண்டிருக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT