Published : 17 Feb 2022 09:01 PM
Last Updated : 17 Feb 2022 09:01 PM
மதுரை: மதுரை மாநகராட்சியில் இன்று மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இதுவரை நடந்த பிரச்சாரம், தேர்தல் வியூகம் அடிப்படையில் இங்கே முந்துவது யார்? - இதோ ஒரு பார்வை.
தமிழகத்தின் தொன்மை நகரம், பண்பாட்டுத் தலைநகரமாக திகழும் மதுரை மாநகரம், மாநகராட்சியாகி 50 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனால், நகரின் அடிப்படை வசதிகள் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நகரின் சாலைகள், குண்டும், குழியுமாக கோடை காலத்தில் புழுதி பறந்தும், மழைக் காலத்தில் தெப்பம்போல் தண்ணீர் நிறைந்தும் நகரின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நிறைவேற்றப்பிறகு மதுரை மாநகரம், ‘சிட்னி’ நகரம் போல் ஒளிரும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கூறினர். ஆனால், கண்ட இடங்களில் குழி தோண்டிப் போட்டும், தேவையில்லாத இடங்களில் நிதிகளை கொட்டி இந்த திட்டதால் மதுரை பாழாகிபோனதுதான் மிச்சம். திமுகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கண்காணிக்க தவறியதால் மதுரை மாநகராட்சியின் இன்றைய மோசமான நிலைக்கு இரு திராவிட கட்சிகளுமே காரணமாகும்.
அரசியல் பாரம்பரியமான இந்த மாநகராட்சியின் கடைசி மேயராக அதிமுகவின் விவி.ராஜன் செல்லப்பா இருந்தார். அவருடன் சேர்ந்து இதுவரை 8 பேர் மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளனர். தற்போது மாநகராட்சியின் 9வது மேயரை தேர்ந்தடுப்பதற்கான மாநகராட்சி தேர்தல் 19ம் தேதி நடக்கிறது.
அதிமுக 100 வார்டுகளில் அதிக இடங்களில் களமிறங்கி, தனித்துப் போட்டியிடும் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்து திமுக 80 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதனால், திமுக, அதிமுகவுக்கு இடையே 80 வார்டுகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. திமுக போட்டியிடும் வார்டுகளில் அக்கட்சி வேட்பாளர்கள் ஆளும்கட்சி என்ற ஆரவாரத்துடன் உறுதியாக தாங்கள்தான் வெற்றிப் பெறுவோம் நம்பிக்கையில் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால், திமுகவின் வேட்பாளர்கள் சில வார்டுகளில் வெற்றி விழாவுக்கு அழைத்து வரும் யானை, குதிரைகளை பிரச்சாரத்திற்கே அழைத்து வந்து பிரச்சாரம் செய்தனர்.
மேலும், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகர, புறநகர மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய குழுக்களை ஏற்படுத்தி தேர்தல் பிரச்சாரம் தொய்வில்லாமல் இன்று மாலை வரை நடந்து முடிந்திருக்கிறது. மாநகராட்சி வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பை பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கட்சித் தலைமை ஒப்படைத்துள்ளது.
அதனால், இருவரும் வார்டு வாரியாக கவுன்சிலர்களை உடன் அழைத்து சென்று வீடு, வீடாக தெரு தெருவாகவும் பிரச்சாரம் செய்தனர். திமுக அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்றால் அக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளர் ‘சீட்’ பெற வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தளபதி ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நான்கு பேரும் தங்கள் ஆதரவாளர்களில் ஒருவரை மேயராக்க தீவிரமுயற்சி செய்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இதுவரை நடந்த பிரச்சாரம், தேர்தல் வியூகம் அடிப்பைடையில் ஆளும் கட்சி என்ற ரீதியில் திமுக மதுரை மாநகராட்சியில் பெரும்பாலாவன வார்டுகளில் வெற்றிப் பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனாலும், திமுகவில் ‘சீட்’ கிடைக்காத நிர்வாகிகள், திமுக வேட்பாளர்களுக்கு எதிராக ஸ்லீப்பர் செல்போல் பல்வேறு உள்ளடி வேலைகளை பார்ப்பது வேட்பாளர்களை கவலையடைய செய்துள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர் மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்ததில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலை கடைசி வரை சரி கட்டுவதற்கு கட்சித் தலைமையும், செல்லூர் கே.ராஜூவும் முயற்சி செய்யவில்லை. வெற்றி வாய்ப்புள்ள பல நிர்வாகிகளுக்கு ‘சீட்’ வழங்கப்படாததால் அவர்கள் பாஜக, அமமுக சார்பிலும், சுயேச்சையாகவும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.
போட்டியிடாத நிர்வாகிகள், ஸ்லீப்பர் செல் போல் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்க்கிறார்கள். பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றுவதே அதிமுகவுக்கு பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், மேயர் வேட்பாளரை பற்றி தற்போதைக்கு அக்கட்சி சிந்திக்கவில்லை என்பதை கவனிக்க முடிகிறது.
இதுபோக அதிமுகவில் இருந்து சென்ற சிலரால் பாஜக ஒரு சில வார்டுகளில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக மீதான ஏமாற்றத்தால் சில வார்டுகளில் சுயேச்சைகளும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக 20 முதல் 30 வார்டுகளும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 70 முதல் 80 வார்டுகளும், பாஜக, சுயேச்சைகள் ஒரு சில வார்டுகளிலும் வர வாய்ப்புள்ளது என்று உள்ளுர் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதிமுகவின் கடைசி நேர தேர்தல் வியூகம் மற்றும் திமுகவின் உள்கட்சி பூசல் போன்றவற்றால் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் திமுகவுக்கு தற்போதுள்ள கிடைக்கும் வார்டுகளில் இருந்து குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
மேலும், திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டுகளில் அதிமுக வலுவாக இருக்கிறது. அதனால், இந்த வார்டுகளில் அதிமுக கணிசமான வெற்றிகளை பதிவு செய்யும்பட்சத்தில் அதிமுக 40 கவுன்சிலர்கள் வரை வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்கின்றனர்.
ஆனாலும், மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்கும் போட்டியில் திமுக முந்துவதாகவே தெரிகிறது. இன்று கடைசி நாளில் திமுக, அதிமுக மட்டுமில்லாது மற்ற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக பிரச்சாரம் செய்து தேர்தல் களத்தை சூடாக்கினர். வசதிப்படைத்த வேட்பாளர்கள் பலர், இன்று கடைசி நாளில் வாக்காளர்களை கவர பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தை பிரமாண்டமாக நிறைவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT