Published : 17 Feb 2022 05:07 PM
Last Updated : 17 Feb 2022 05:07 PM
கோவை: 'மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கவும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவும் வேண்டுமெனில் துணை ராணுவம் கோவைக்கு வரவேண்டும்' என முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ''கரூர், சென்னையிலிருந்து அதிகமான ரவுடிகள் கோவைக்கு வந்துள்ளனர். மேலும், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்கின்றனர். தவறு செய்பவர்கள் மீது புகார் அளிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர்.
திமுகவினர் என்ன சொல்கின்றனரோ அப்படியே காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பணம், பரிசுப்பொருள், கொலுசு, ஹாட்பாக்ஸ் போன்றவற்றை திமுகவினரோடு சேர்ந்து காவல்துறையினர் விநியோகம் செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை முழுமையாக காவல்துறையினர் மீறி வருகின்றனர். இந்த வேலையை செய்யாவிட்டால் பணியிடமாறுதல் செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் திமுகவினரால் மிரட்டப்படுகின்றனர்.
இவ்வளவு விதிமீறல்கள் நடந்தும் தேர்தல் ஆணையம் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் முழுமையாக திமுகவுக்கு துணைபோய்விட்டது. எனவே, மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கவும், தேர்தல் ஜனநாயக முறைப்படியும் நடக்க வேண்டுமெனில் துணை ராணுவம் கோவைக்கு வர வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு இந்திய இறையாண்மையை காக்க வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT