Last Updated : 20 Apr, 2016 12:52 PM

 

Published : 20 Apr 2016 12:52 PM
Last Updated : 20 Apr 2016 12:52 PM

மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் குடும்ப ‘சென்டிமென்ட்’ பிரச்சாரம்

மகேஷ் பொய்யாமொழிக்கு ஏற்பட்டுள்ள வெளியூர் வேட்பாளர் என்ற இமேஜை மாற்றுவதற்காக மு.க.ஸ்டாலின், குடும்ப சென்டிமென்டாக பேசி திருவெறும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளரான மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய இவர், தற்போது முதல்முறையாக தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். திருவெறும்பூர் தொகுதிக்கு புதியவர் என்ற போதிலும், இங்கு கணிசமாக உள்ள திமுக மற்றும் இவர் சார்ந்த சமுதாயத்தின் வாக்குகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும், திமுகவினரும் பிரச்சாரப் பணிகளைத் தொடங்கினர்.

ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிடும் கலைச்செல்வன் (அதிமுக), தற்போதைய எம்எல்ஏ செந்தில்குமார் (தேமுதிக) ஆகியோரும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்த இரு கட்சிக்காரர்களும் மகேஷ் பொய்யாமொழியை, வெளியூர் வேட்பாளர் எனக்கூறி பிரச்சாரம் செய்து வருவதும் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், கடந்த 2006-ல் அதிமுக கூட்டணி வேட்பாளராக வெளியூரிலிருந்து வந்து இங்கு போட்டியிட்ட, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் தோல்வியைச் சுட்டிக்காட்டி சிலர் சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சிய மகேஷ் பொய்யாமொழி, அவசரம் அவசரமாக இத்தொகுதிக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து, கடந்த 17-ம் தேதி பால்காய்ச்சி குடும்பத்துடன் குடிபுகுந்துவிட்டார்.

அத்துடன், நேற்று முன்தினம் திருச்சி வந்திருந்த மு.க.ஸ்டாலினிடம் தன்னை வெளியூர் வேட்பாளர் எனக்கூறி பிரச்சாரம் செய்வது குறித்த கவலையை மகேஷ் பொய்யாமொழி பகிர்ந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து திருவெறும்பூரில் நடைபெற்ற பங்கேற்ற திமுக பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “மகேஷ் பொய்யாமொழி வெளியூரைச் சேர்ந்தவர் எனக்கூறி எதர்கட்சிக்காரர்கள் அவதூறு பிரச்சாரம் செய்ததால், அவர் உடனடியாக இத்தொகுதியிலேயே குடியேறிவிட்டார். இத்தொகுதியில் நானே போட்டியிடுவதாக கருதி நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டம் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்தான் இந்த மகேஷ் பொய்யாமொழி. அன்பிலாரின் வாரிசாகத் திகழ்ந்தவர் என் ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் எனக்கும், கட்சிக்காரர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தவர் பொய்யாமொழி.

தேர்தல் என்றாலும், வேறு எந்த விதமான சுற்றுப்பயணமாக இருந்தாலும் கருணாநிதிக்கு எப்படி தர்மலிங்கம் இருந்தாரோ, அதைப்போலவே அன்பில் பொய்யாமொழி எனக்குத் துணையாக இருந்தார். இன்று அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். அவரது பெயரை நிலைநாட்டத்தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இத்தொகுதியின் வேட்பாளராக திமுக தலைவர் கருணாநிதி உங்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நான் எப்போதும் அன்போடு, தம்பி என்று அழைத்தாலும், அவர் என்னை, பெரியப்பா என்றே அன்போடும், உரிமையோடும் அழைப்பார். அந்த உரிமையில் அவரை நான் எனது மகனாகவே கருதுகிறேன். எனவே, திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

அதிமுக, தேமுதிகவினரின் வெளியூர் வேட்பாளர் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ள குடும்ப சென்டிமென்ட் பிரச்சாரம் திமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எடுபடுமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

வாகை சூடிய வெளியூர் வேட்பாளர்கள்

திமுகவினர் கூறும்போது, “ஸ்ரீதர் வாண்டையார் தோற்கடிக்கப்பட்டதை மட்டுமே கூறி அதிமுக, தேமுதிகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதே தொகுதியில் 1984-ல் அண்ணாதாசன் (அதிமுக), 1989-ம் ஆண்டில் பாப்பா உமாநாத் (மார்க்சிஸ்ட் கம்யூ), 1991-ல் டி.ரத்தினவேல் (அதிமுக), 1996-ல் கே.துரை (திமுக) என வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, அதிமுக, தேமுதிகவின் இந்த பிரச்சாரம் எடுபடாது. கடந்த தேர்தலில் சுமார் 4,205 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இத்தொகுதியை திமுக இழந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் செய்துள்ள குடும்ப சென்டிமென்ட் பிரச்சாரம் எங்களுக்கு நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x