Published : 30 Jun 2014 09:00 AM
Last Updated : 30 Jun 2014 09:00 AM
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் நிறைய விஷயங்கள் தெரிந்தாலும் அதை செயல்படுத்தும் சுதந்திரம் அவர்களிடம் இல்லை. அந்த சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது பிம்லா சந்திரசேகரின் ‘ஏக்தா’ அமைப்பு.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான பிம்லா, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சமுதாய மேம்பாட்டுப் பயிற்சிக்காக 1980-ல் பெங்களூர் வந்தார். பயிற்சியின் ஒரு அங்கமாக மதுரையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான அன்பகம் காப்பகத்தில் பணி செய்தார். அப்போது, தனக்கு சீனியரான சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், பின்னர் மதுரையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
மொழி தெரியாத ஊர் என்பதால் மதுரை பகுதியில் சமுதாயப் பணிகள் செய்வது தொடக்கத்தில் பிம்லாவுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைத்தும் சரளமாக தமிழ் பேச வரவில்லை அவருக்கு. ‘தமிழ் பேசத் தெரியாமல் உங்களால் எப்படி களப்பணி செய்ய முடியும்’ என்று ஒரு தொண்டு நிறுவனம் கேட்டபோது, ’மக்களோடு பேசிப் பழகினால்தானே எனக்கு தமிழில் பேசவரும்’ என்றார் பிம்லா.
அவருக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்தது தொண்டு நிறுவனம். அந்த கெடுவுக்குள் பணியை முடித்து அழகாய் தமிழும் பேசினார் பிம்லா. அது சரி, இப்போது பிம்லா என்ன செய்கிறார்? அதை அவரே சொல்கிறார்.
‘‘கல்லூரிப் பருவத்தில் எல்லோருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் கனவு. அதுதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது. மற்றவர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக சமூகப் பணி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக நான் ஆரம்பித்த அமைப்பு ‘ஏக்தா’.
பெண்களை பல தளங்களிலும் வலுப்படுத்துவதுதான் ‘ஏக்தா’வின் குறிக்கோள். ஆண்களுக்குச் சமமாக பெண்களும் வேலை செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இடங்களில் முடிவுகளை தீர்மானிப்பவர்களாக பெண்கள் வரமுடிவதில்லை.
முடிவுகளை தீர்மானிக்கும் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது குறித்த பயிற்சி வகுப்புகளை நாங்கள் நடத்துகிறோம். குறிப்பாக தொண்டு நிறுவனங்களில் பணி செய்யும் பெண்களுக்கும் சுயஉதவிக் குழு தலைவிகளுக்கும் இந்த வகுப்புகளை நடத்துகிறோம். பயிற்சியின்போது அந்தப் பெண்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை கேட்டுவிட்டு சும்மா இருக்க முடியாது. அவர்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் ஆண்கள்.
பிரச்சினைக்கு காரணமானவர்களை ஒதுக்கிவிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முடியாது. பிறக்கும் போதே ஆண்கள் வன்முறையாளர்களாக பிறப்பதில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் வன்முறையாளர்களாக மாற்றப் படுகின்றனர். இதை இரு பாலரும் புரிந்துகொள்ள கவுன்சலிங் கொடுக்கிறோம். தலைமுறை மட்டத்தில் இந்த கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பெண் களின் ஆளுமைத் திறனை வலுப் படுத்துவது குறித்தும் அதற்கு ஆண்கள் அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பயிற்சி வகுப்பு களை நடத்துகிறது ‘ஏக்தா’.
ஆண் - பெண் சமத்துவம் குறித்து புத்தகங்களில் எழுதி னால் மட்டும் போதாது. சமுதாயத்திலும் அதற்கான நிஜமான மாற்றம் வரவேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்கள் கணிசமான அளவில் பதவி வகிக்கிறார்கள். ஆனால், அங்கு அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. தந்தை, கணவர், சகோதரர், அதிகாரிகள் என ஆண்கள்தான் அங்கே ஆளுமை செலுத்துகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மதுரை, கடலூர் மாவட்டங்களில் 75 கிராம பஞ்சாயத்துக்களில் நாங்கள் இப்போது வேலை செய்துகொண்டிருக்கிறோம்.
உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களின் ஆளுமையை வலுப்படுத்துவதற்காக முறையான பயிற்சிகளை பெண்களுக்கு அளிக்கிறோம். பெண்களுக்கு ஏதிரான வன்முறைகளில் ஈடு பட்டால் உங்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என்று ஆண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறோம். அதேநேரத்தில், தங்களுக்கான சட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பெண் களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
பெண்கள் மீதான வன்முறையும் மனித உரிமை மீறலே. உலகத்து பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வன்முறைக்கு ஆளாவதாக ஐ.நா. அறிக்கை சொல்கிறது. நூறு கோடி பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்தும் பயணத்தில் நாங்களும் ஒரு சிறு துடுப்பாய் இருக்கிறோம்.’’ தன்னடக்கத்துடன் சொன்னார் பிம்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT