Last Updated : 17 Feb, 2022 09:43 AM

 

Published : 17 Feb 2022 09:43 AM
Last Updated : 17 Feb 2022 09:43 AM

ஆயிரக்கணக்கானோர் ரசித்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு; காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு: 110 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் குன்றின் மீது அமர்ந்து மஞ்சுவிரட்டை கண்டு களித்த பார்வையாளர்கள்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிர்இழந்தார். 110 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்கு உட்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். இதனை முல்லைமங்கலம், சதுர்வேத மங்கலம், கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய 5 நிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.

இவ்விழாவையொட்டி நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பு கோயில்காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்டன.

தொழுவில் இருந்து 131 காளைகள் அவிழ்த்துவிடபட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மலைக்குன்றின் மீது அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.

முன்னதாக ஆங்காங்கே வயல்வெளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டை காண வந்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரைச் சேர்ந்த சுந்தரம்(60) என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.

மஞ்சுவிரட்டை சென்னையைச் சேர்ந்த திரைப்படக் குழுவினர்வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வாகனத்தின் மீது காளை பாய்ந்ததில் ஊழியர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதில் இருவர் காயமடைந்தனர்.

மாடுகள் முட்டியதில் காயமடைந்த 110 பேருக்கு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 23 பேர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிஎஸ்பி வினோஜி தலைமையில் போலீஸார் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x