Published : 17 Feb 2022 09:32 AM
Last Updated : 17 Feb 2022 09:32 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை தனது ஆதரவாளருக்குப் பெறுவதற்கு திமுக எம்எல்ஏவும், மனைவிக்குப் பெறுவதற்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் துணை மேயர் ஆகக்கூடிய சில வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்,
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆனால், திமுக, அதிமுக இடையே மட்டுமே கடுமையான போட்டி நிலவு வருகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 58 வார்டுகளிலும், அதிமுக 67 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 70 வார்டுகளில் 35 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள், கட்சிமற்றும் அரசியல் சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத தங்களுடைய அம்மா, மனைவி, மகள், அக்கா, தங்கையை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர்.
மேயர் பதவி ஆதிதிராவிடர் இன பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 4, 12, 13, 27, 31, 51 ஆகிய6 வார்டுகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 6 வார்டுகளிலும் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்காமல் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பொது வார்டான 32-வது வார்டில் திமுக வேட்பாளராக ஆதிதிராவிட பெண் வசந்தகுமாரி போட்டியிடுகிறார். திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றால், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளரான வசந்தகுமாரிக்கே மேயர் பதவிகிடைக்குமென திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், பல்லாவரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தன்சிங் மனைவி தனம் 13-வது வார்டில் போட்டியிடுகிறார். அதிமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றால் தனத்துக்கு மேயர் பதவி ஒதுக்கப்படலாம் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். மேயர் பதவியைப் பிடிக்க தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவும், பல்லாவரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தன்சிங்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் எப்படியும் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுவிடும். நிச்சயம் வசந்தகுமாரிக்கு மேயர் பதவி கிடைத்துவிடும் என்று திமுகவினர் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இந்த வார்டில் அதிமுகவைச் சேர்ந்த தாம்பரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஆ.கோபிநாதன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மேயராக வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை வீழ்த்த அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், துணை மேயராக வரக்கூடிய வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியின் அண்ணன் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் போட்டிக் களத்தில் உள்ளதால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியான மனிதநேய மக்கள்கட்சியைச் சேர்ந்த மு.யாக்கூப் 50-வதுவார்டில் போட்டிருக்கிறார். இவர் மாநிலதுணைப் பொதுச் செயலாளராக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இவருக்காகப் பிரச்சாரம் செய்கின்றனர். இவரும் துணை மேயராக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள்எம்எல்ஏ தன்சிங் மகன் த.ஜெயப்பிரகாஷ், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுகசெயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனுக்கு மிகவும் நெருக்கமான இரா.மோகன்ஆகியோருக்கு, துணை மேயராக வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிட்லபாக்கம் பேரூராட்சியின் தலைவராக மோகன் ஏற்கெனவே 2 முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் தேர்தல் என்பதால் கவுன்சிலர் பதவியைப் பிடித்து மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுக, அதிமுக போராடி வருகின்றன. வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த பின், இந்த ‘மியூசிக்கல் சேர்' போட்டியில் யார் மேயர் நாற்காலியைக் கைப்பற்றுவர் என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT