Published : 17 Feb 2022 06:52 AM
Last Updated : 17 Feb 2022 06:52 AM

தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கும் பதிவுத் துறை: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை

பதவி இறக்கத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த சார்பதிவாளரின் சொத்துகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டையில் உதவி சார்பதிவாளராக பணிபுரிபவர் சந்திரசேகரன். இவர் ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வுபெற உள்ளார். இவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சந்திர சேகரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு: பொது ஊழியரான ஒருவர் தனக்கான பதவியையோ, பணி இடத்தையோ அவரது விருப்பத்தின்படி கேட்க முடியாது. பொது ஊழியரின் பணி என்பது பொதுமக்களின் நலனுக்கானது. பொது ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட பணியில் பணியாற்ற விரும்பும்போது அங்கு தேவையில்லாத தலையீடுகள் இருக்கும்.

பதிவுத் துறையில் ஏற்கெனவே ஊழல்கள் மலிந்துள்ளன. பதிவுத் துறை விதிப்படி ஓய்வு பெறுவதற்கு 6 மாதம் வரை இருக்கும்போது அவர் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இருக்க முடியாது. மனுதாரர் குறிப்பிட்ட பணியிடத்தை கேட்பதை உரிமையாக கருதமுடியாது. பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். மனுதாரரின் கோரிக்கை அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மனுதாரரின் பணிப் பதிவேடு தொடர்பான ஆவணங்களையும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் மனுதாரர் மீது பணி விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பதிவுத் துறை ஐஜி 4 வாரங்களில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x