Published : 17 Feb 2022 07:35 AM
Last Updated : 17 Feb 2022 07:35 AM
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதால், கும்பகோணத்தின் முதல் மேயர் பதவியை கைப்பற்ற திமுக-அதிமுகவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், முதல் மாநகராட்சி தேர்தலை கும்பகோணம் சந்திக்கிறது. நகராட்சியாக இருந்தபோது 45 வார்டுகள் இருந்த நிலையில், தற்போது 48 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 48 வார்டுகளில் திமுக-அதிமுக 41 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. பெரும்பாலும் வார்டுகளில் வசிப்பவர்களே இத் தேர்தலில் போட்டியிடுவதால், வாக்காளர்களின் வாக்குகளை பெற காலை, மாலை என முழு நேரமும் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சியின் முதல் தேர்தல் என்பதால், எப்படியாவது மாநகராட்சியில் அதிக இடங்களை பிடித்து முதல் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கும்பகோணத்தில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர்.
இதனால் அதிமுகவினர் உற்சாகமடைந்து, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை, குறிப்பாக மாவட்ட தலைநகரமாக மாற்றுவது உட்பட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் கும்பகோணத்தில் மட்டும் 50 இடங்களில் எல்இடி திரை மூலம் அவரது பிரச்சாரம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவினர் உற்சாகத்துடன் அதிக வார்டுகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT