Published : 16 Feb 2022 10:07 PM
Last Updated : 16 Feb 2022 10:07 PM

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வித்தியாசமான வாக்குறுதிகளால் கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்தில் முக்கியக் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வித்தியாசமான பாணியில் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி 104வது வார்டான திருமங்கலம் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல். அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், தனது சின்னமான பூப்பந்து மட்டை சின்னத்தை மக்கள் மத்தியில் பதியவைப்பதற்கு புதிய பாணிகளை கையாண்டு வருகிறார். இந்த அப்துல் ஜலீல் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிறது. நீட், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடியவர்.

இதேபோல், 2016 சென்னை பெருவெள்ளத்தின் போதும், கரோனா பெருந்தொற்றின் போது இப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த அப்துல் ஜலீல், நடப்பு ஆண்டில் மட்டும் 23 குழந்தைகள் படிக்க உதவி செய்துள்ளாராம். மேலும், இப்பகுதி மக்களுக்காக கடந்த 13 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்துவருவதோடு, 6 ஆண்டுகளில் 63 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக உதவியுள்ளார் என்கிறார்கள் இப்பகுதியினர்.

இந்த மக்கள் செல்வாக்கை வாக்குகளாக அறுவடை செய்யும் முனைப்பில் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் ஜலீல், அதற்காக வித்தியாசமான வாக்குறுதிகளால் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்துவருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா, மகளிர் சுயத்தொழிலுக்கு அரசிடமிருந்து நேரடி கடன் உதவி, தரமான சாலைகள், மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்டவை இவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்.

தனது தேர்தல் பிரவேசம் தொடர்பாக பேசியுள்ள அப்துல் ஜலீல், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருமங்கலம் பகுதியில் தான். 3 தலைமுறையாக நாங்கள் இங்கு தான் வசித்து வருகிறோம். நான் படிக்காதவன். அதேநேரம், என்னை போல் யாரும் இருந்துவிட கூடாது என்பதற்காக, படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறேன். இதை தொடர்ந்து செய்யும் பொருட்டு இந்த சேவையை எனது தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்துள்ளேன். மேலும், இப்பகுதிக்கு தரமான சாலை, குடிநீர், சுகாதாரம் போன்றவை எட்டா கனியாக தான் உள்ளது. எனவே, என் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையிலும் தேவையானவற்றை செய்யும் பொருட்டும் தேர்தல் அரசியலில் நுழைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "வெற்றிபெற்றால் இந்த 104வது வார்டை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக வார்டாக மாற்றுவேன்" என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x