Published : 16 Feb 2022 07:27 PM
Last Updated : 16 Feb 2022 07:27 PM

அறிவுக் கோயில்களான நூலகங்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டுவது திமுக அரசுதான்: புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "அறிவுக் கோயில்களான நூலகங்களைக் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் திமுக அரசு. திராவிட இயக்கம் என்பதே அறிவு இயக்கம்தான்" என்று புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புத்தகக் காட்சி தொடக்கம்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 45-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த பின்னர் அவர் பேசியது: "சென்னையில் நடப்பது போன்றே மதுரையில் 14 ஆண்டுகள், கோவையில் 4 ஆண்டுகளாகவும் இந்தப் புத்தகக் காட்சியை பபாசி நடத்தி வருகிறது. இதுபோல் மற்ற மாவட்டங்களில் நடத்த, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகம் உரிய உதவி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

2007-ல் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த அன்றைய முதல்வர் கருணாநிதி, சென்னையில் மிக பிரமாண்டமான நூலகம் அமையப்போகிறது என்ற அறிவிப்பை அப்போதுதான் வெளியிட்டார். அதுதான் இன்று எல்லோரும் வியக்கக்கூடிய அளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். அதேபோல் தலைவர் கருணாநிதியின் பேரில் மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மாபொரும் நூலகம் அமைக்க தமிழக அரசு பணிகளைத் தொடங்கியுள்ளது. அந்த நூலகம் மிக பிரமாண்டமான வகையில் விரைவில் எழ இருக்கிறது.

இதுபோன்ற அறிவுக் கோயில்களைக் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. இந்த அரசு எனக் கூறுவதை விட நம்ம அரசு. திராவிட இயக்கம் என்பதே அறிவு இயக்கம்தான். நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ் சமூகத்துக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டியது திராவிட இயக்கம்தான்.

திமுகவின் தலைமைக் கழகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம். அந்த அறிவாலயம் தொடங்கப்படுவதற்கு முன்பு திமுகவின் முதல் தலைமையகம் எதுவென்று கேட்டால், ராயபுரத்தில் இருக்கக்கூடிய அறிவகம். ஆண்டாண்டு காலமாக அடக்கி, ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு புத்தகம் அச்சடித்து சுயமரியாதை பரப்புரையில் ஈடுபட்டு அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

தமிழ்நாட்டு அரசுப் பணியில் நுழையக் கூடியவர்களுக்கு தமிழ்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வுப் பணி முகமைகள் அரசுப் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களுக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் தமிழ்மொழித் தேர்வினை தகுதி தேர்வாக்கியுள்ளது தமிழக அரசு. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வு வாரியங்களிலும் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு நிச்சயமாக நடத்தப்படும்.

ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டத்துக்கான குறிக்கோள், ஆலயங்களில் தமிழ் வழிபாடு தொடர்பான நூல்களையும் நான் வெளியிட்டிருக்கிறேன். மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தமிழ் மொழியிலே கையெழுத்திடுவது, கோப்புகள் முழுவதையும் தமிழிலே தயாரித்து நிறைவேற்றுவது ஆகிய செயல்பாடுகளை அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

கரிசல் இயக்கத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணன், செந்தமிழ் அந்தணர் மதுரை இரா.இளங்குமரனார் ஆகியோர் மறைவுக்கு அரசு மரியாதை தரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக தமிழர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதில் 148 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆட்சிக்கு வந்த இந்த 8 மாத காலத்தில் 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்திற்கு, ரூ.80 லட்சம் பிரித்து தரப்பட்டிருக்கிறது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நூல்களை இரண்டு பெரும் தொகுதிகளாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் வெளியிட்டுள்ளோம். தமிழறிஞர்களின் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கிய நூல்களை குறைந்த விலையிலே அச்சிட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

திராவிட இயக்கத்தின் வரலாறு, கொள்கைகள், கோட்பாடுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக கொண்ட திராவிட களஞ்சியம் வெளியாக இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மாநிலப் பாடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதழியல் துறையில் மிக சிறந்து விளங்குவோருக்கு கலைஞர் எழுதுகோல் விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையோடு வழங்கப்படும்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரை சிறப்பிக்க 13 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி இருக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

முன்னதாக, பத்திரிக்கையாளர் சமஸ் (உரைநடை), பிரசன்னா ராமசாமி (நாடகம்), கவிஞர் ஆசைதம்பி (கவிதை), எழுத்தாளர் வெண்ணிலா (புதினம்), பால் சக்கரியா (பிறமொழி) , மீனா கந்தசாமி (ஆங்கிலம்) ஆகிய 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x