Published : 16 Feb 2022 05:19 PM
Last Updated : 16 Feb 2022 05:19 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும்” என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் 126-ம் ஆண்டு மாசிமக கடல்தீர்த்தவாரி உற்சவம் இன்று (பிப். 16) நடைபெற்றது. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள், நேற்று வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு, கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, கடற்கரையோரம் அணிவகுத்து நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள தனியார் திருமண நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியது: "இன்றைய கரோனா காலக்கட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். புதுச்சேரியில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திவிட்டோம் என்ற மக்கள் பயமின்றி அலட்சியமாக உள்ளனர். புதுச்சேரியில் பல தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் தான் இருக்கிறோம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இறை நம்பிக்கையில் எந்தவிதத்திலும் குறுக்கிடவில்லை.
புதுச்சேரியில் விமான சேவை தொடங்குவதற்கான ஆரம்பக்கால நடவடிக்கைகள் முடிவடைந்து, ஆரம்பிக்கின்ற நிலையில் இருக்கிறது. நிச்சியம் மிக விரைவில் விமான சேவை தொடங்கப்படும். அதுமட்டுமின்றி பல நல்லத்திட்டங்கள் புதுச்சேரிக்கு வர இருக்கிறது” என ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
மாசிமக உற்சவத்தையொட்டி, புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கடல்தீர்த்தவாரியில் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT