Last Updated : 16 Feb, 2022 04:37 PM

 

Published : 16 Feb 2022 04:37 PM
Last Updated : 16 Feb 2022 04:37 PM

திருமழபாடி வைத்தியநாத சுவாமி, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்களில் மாசிமகத் தேரோட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறைய வைத்தியநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற மாசிமகத் தேரோட்டம்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த திருமழபாடி சுந்தராம்பிகை உடனுறைய வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம் இன்று (பிப் 16) நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் திருமாள், இந்திரன் ஆகியோரால் வழிப்பட பெற்றதும், ஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள், காடவர்கோன் ஆகியோர் திருப்பதிகங்கள் பாடி வழிப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான மாசிமகப் பெருவிழா விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்திருளி வீதியுலா நடைப்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த சுந்தராம்பிகை உடனுறைய வைத்தியநாதசுவாமி.

எம்எல்ஏ கு.சின்னப்பா, ஒன்றியக் குழு தலைவர் சுமதி, இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பெரியத் தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து மாலை 5 மணியளவில் நிலையை அடையும். திருமானூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோத்சவ விழாவையொட்டி திருத்தேர் வீதி உலா இன்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.

கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவானது தொடர்ந்து தினசரி சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சுவாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதி உலா நடைபெற்றது. தேரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமௌலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x