Published : 16 Feb 2022 03:27 PM
Last Updated : 16 Feb 2022 03:27 PM
கோவை: ”கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை தேர்தல் ஆணையம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் சூழலில், கோவையின் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். புகார் தெரிவித்த பிறகு, அவர்கள் காலதாமதமாக சம்பவ இடத்துக்கு வந்து சேர்கின்றனர்.
மாநகராட்சியின் 70-வது வார்டில் நேரடியாக கையும், களவுமாக பணம் அளித்தவர்களை பிடித்து ஒப்படைத்தும்கூட அவர்கள்மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருசில இடங்களில் பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு காவல்துறையினரே உறுதுணையாக இருப்பதாக கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையில் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத திமுக, இந்தத் தேர்தலில் தங்கள் மானப் பிரச்சினையாக கருதி இந்த மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். வெளியூர் ஆட்கள், உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் ஆணையம் வெளியேற்ற வேண்டும்.
சிறுவாணி அணையில் இப்போது இருக்கும் தண்ணீரை வைத்து மார்ச் இறுதிவரை கூட குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. சிறுவாணி அணையின் முழு கொள்ளளவில் நீர் இருந்தால்தான் கோவை மாநகராட்சியில் உள்ள பாதி வார்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும். எனவே, கேரள அரசோடு தமிழக அரசு பேசி அணை முழு கொள்ளளவை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT