Published : 16 Feb 2022 03:02 PM
Last Updated : 16 Feb 2022 03:02 PM
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது. அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் சீட்டையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது. அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் சீட்டையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை ஒரு வாக்காளர் பயன்படுத்த ஏதுவான பொத்தான். வேட்பாளர்கள் பெயருடன் இதுவும் இருக்கும்.
வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியதும், முன்பகுதியில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் கருவியில் வாக்களித்த சின்னம், பெயர் ரோலர் வருவதை வாக்காளர்கள் பார்க்க முடியும். அதுதான் விவிபேட் கருவி. இந்த இரண்டு வசதியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இருக்காது.
உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளில் இதற்கு உரிய இடமில்லை என்பதையே காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். ’உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை 2006-ல் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை மாநில அரசுதான் செய்ய வேண்டும். தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்னரே இதனை அரசு செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
ஆனால், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலிலும் நோட்டோ செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஒடிசா கடைசியாக இணைந்துள்ளது.
தமிழகத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விவிபேட், நோட்டாவை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு நகரப் பஞ்சாயத்து வார்டுக்கும் குறைந்தது 1000 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் 10 வேட்பாளர்கள் உள்ளனர். அப்படியிருக்க நோட்டாவுக்கு எந்த ஒரு வேட்பாளரையும்விட அதிகமாக வாக்குகள் பதிவாக வாய்ப்பில்லை. இதுபோன்ற நிலவரங்களை சமாளிக்கும் வழிகளை முதலில் கண்டறிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள், வாக்காளார்களுக்கு நோட்டா உரிமையை மறுக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். அறப்போர் இயக்கத்தின் நிறுவனர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், ”இவிஎம் இயந்திரத்தில் நோட்டா வசதியை நிறுவுவதில் பெரிய சிக்கல் இருக்காது. ஒருவேளை வாக்காளர்கள் கட்சி ஏஜென்ட் முன்னிலையில் வாக்களிக்க விருப்பமில்லை என்று மாநில விதிகள் பிரிவு 71-ன் கீழ் (49ஓ-வுக்கு) நிகரானது, எழுத்திக் கொடுக்க வேண்டும் என்றால்தான் அடையாளம் தெரியவரும் என்ற பிரச்சினை இருக்கும். மற்றபடி நோட்டாவை இவிஎம் இயந்திரத்தில் நிறுவுவதால் சிக்கல் இருக்காது” என்றார்.
தமிழகத்தில் கடந்த 2013-ல் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்தான் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் 2014, 2019 மக்களவைத் தேர்தலில் நடைமுறையில் இருந்தது. 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5.6 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்க்களித்தனர். ஆனால், 2021-ல் இந்த எண்ணிக்கை 3.46 லட்சமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT