Published : 16 Feb 2022 12:11 PM
Last Updated : 16 Feb 2022 12:11 PM
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் அதிக வார்டுகளை கைப்பற்றம் முனைப்பில் திமுக, அதிமுகவினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் ஒரு மாநகராட்சியின் 100 வார்டுகள், 7 நகராட்சிகளின் 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளின் 502 வார்டுகள் என 802 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மாவட்டத்தில் மற்ற அரசியல் கட்சிகளை விட திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
கோவை மாநகராட்சியில் அதிக வார்டுகளை வென்று, மேயர் பதவியை கைப்பற்றி விட திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் கோவையில் திமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் எம்.எல்.ஏக்களாக இல்லை. இதனால் அரசு நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மேடையில் அமரக் கூட திமுகவினரால் முடியவில்லை. அதேசமயம், கோவையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தாலும், ஆட்சியை பறிகொடுத்ததால், கோவையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களால் முடியவில்லை.
இச்சூழலில் கோவைக்கு, அரசு திட்டங்களை செயல்படுத்த பொறுப்பு அமைச்சராக, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். முன்பு அதிமுகவில் இருந்த போது, தற்போதைய அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணியுடன், அமைச்சரவை சகாவாக செந்தில்பாலாஜி இருந்தார். இதனால் எஸ்.பி.வேலுமணியின் தேர்தல் சூட்சமங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும், வேலுமணியை சமாளித்து திமுகவை கரைசேர்த்திட செந்தில் பாலாஜி சரியான நபர் என தலைமை நினைத்து அவரை நியமித்துள்ளதாக திமுக கட்சியினர் வரவேற்றனர்.
இதற்கேற்ப, அவர் கோவை மாவட்ட திமுகவினரை ஒருங்கிணைந்து, கட்சிப் பணிகளையும் தீவிரப்படுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும், கூட்டணிக் கட்சியினருக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்கிவிட்டு, அதிக இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. எஸ்.பி.வேலுமணி, தேர்தல் யுக்தியை சமாளிக்கும் வகையில், தனது பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை கைப்பற்ற பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
குறிப்பாக, உள்ளூர் திமுகவினரை மட்டும் நம்பிக் கொண்டு இருக்காமல், கரூரில் இருந்து தனது ஆதரவு திமுக நிர்வாகிகளை வரவழைத்து, அவர்களை உள்ளூர் திமுகவினருடன் இணைத்து, களத்தில் இறக்கி மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். திமுக ஆட்சி வந்ததில் இருந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் போன்றவற்றை செல்லும் இடங்களில் எல்லாம் அமைச்சரும், திமுகவினரும் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சட்டப்பேரவை தொகுதிகளைப் போல், மாவட்டத்திலுள்ள உள்ளாட்சிகளில் அதிக வார்டுகளை கைப்பற்றி மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளையும் கைப்பற்றிட எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வில் விலக்கு வாங்கித் தராதது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடிகள், அடிப்படை தேவைகள் தீர்க்கப்படாதது போன்ற காரணங்களை மக்களிடம் எடுத்துக் கூறி அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதாக குற்றம் சாட்டும் அதிமுகவினர் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடமும், மாநகர காவல் ஆணையரிடமும் புகார்களையும் அளித்துள்ளனர்.
இதனிடையே, திமுக - அதிமுக பிரச்சாரம் குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறும்போது, "எம்.எல்.ஏக்கள் இல்லாத சூழலில், மேயர், தலைவர் பதவிகளை கைப்பற்றிட திமுகவினர் முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் மேயர், தலைவர் பதவிகளை கைப்பற்றி, உள்ளாட்சிகளில் அரசு திட்டங்களை, அடிப்படை தேவைகளை செயல்படுத்திடும் நோக்கில் அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளின்போது, இவர்களது வியூகத்தின் பலன் தெரியவரும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT