Published : 16 Feb 2022 12:00 PM
Last Updated : 16 Feb 2022 12:00 PM
தஞ்சாவூர்: திமுகவின் கொள்கைகளை நாடகமாக பரப்பிய தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா இடித்து அகற்றப்பட்டுள்ளதற்கு ஆதங்கமும் பதிவாகி வருகிறது.
திமுகவின் கொள்கைளை நாடகமாக பொதுமக்களிடையே பரப்பிய, தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா நாடக மன்றம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், தஞ்சாவூர் மாநகராட்சி இடத்தினை, 1927-ம் ஆண்டு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் கட்டப்பட்டது. இந்த சபாவில் நாடகம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தது. முதலில் ராமநாதன் செட்டியார் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட வந்த இந்த சபா, பின்னர் ஆர்.கே.ராமநாதன் என்பவர் சபாவின் செயலாளராக பொறுப்பேற்றார். ஆர்.கே.ராமநாதன் பொறுப்பேற்ற பின்னர், சபா வளாகத்தில், மாநகராட்சி அனுமதியின்றி மதுக்கூடம், ஹோட்டல், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை கட்டி உள்வாடகைக்கு விட்டிருந்தார்.
மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் செலுத்தவில்லை, இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் ஆகியோர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்கள ஆய்வு செய்தனர். இதில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி மதுக்கூடம், உணவகம் நடத்தியவர்களுக்கு முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழக்கப்பட்டது. அதேபோல், சுதர்சன சபா நிர்வாகம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டி வரியினங்கள் செலுத்தாமல் இருந்ததால், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து கடந்த பிப்.1 -ம் தேதி மாநகராட்சி சார்பில், இடத்தை கையகப்படுத்தி தண்டோரா போட்டு, இடம் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ் சபாவின் கதவருகே ஒட்டினர். கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுதர்சன சபா வளாகத்தில் இருந்த அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று சுதர்சன சபா கட்டிடம் பாழடைந்து இருந்ததாகக் கூறி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அந்த கட்டிடத்தை பொக்ளைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
திமுகவின் கொள்கைகளை பரப்பிய இடம்: சுதர்சன சபாவில் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு மற்றும் வேலைக்காரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களில் 100 நாட்களுக்கும் மேலாகவும், மு.கருணாநிதியின் நாடகங்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள் போன்ற ஏராளமான கூட்டங்கள் இந்த இடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சபாவை சீரமைத்து பாதுகாத்திருக்கலாம், ஆனால் அதை இடித்து அகற்றியது சமூக ஆர்வலர்கள் மற்றும் திராவிட பற்றாளர்களிடையே பெரும் வேதனையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் கூறுகையில், ''பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட முன்னோடிகள் தீட்டிய நாடகங்கள் மூலம் பல்வேறு சமூகக் கருத்துகளை பொதுமக்களிடம் இந்த நாடக மன்றத்தில் நடித்தும், பேசியும் பரப்பினர். தஞ்சாவூரின் மையப்பகுதியில் இந்த சபா இருந்ததால் ஏராளமான நாடகங்களும், சொற்பொழிவுகள் தமிழ், ஆங்கிலத்தில் எல்லாம் நடைபெற்றது. பழமையான இந்த சபாவை புதுப்பித்து பாதுகாத்திருக்கலாம். ஆனால் இதை இடித்து தரைமட்டமாக்கியது வருத்தமான ஒன்று. சபா வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும், சபாவையும் ஒன்றாக பார்த்திருக்கக் கூடாது, இதை இடித்தது திராவிட பற்றாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT