Published : 16 Feb 2022 06:10 AM
Last Updated : 16 Feb 2022 06:10 AM
சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேசிய அறிவியல் திருவிழா கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு அறிவித்துள்ளது.
சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928-ம் ஆண்டு பிப்.28-ம் தேதி உலகுக்கு அறிவித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விக்யான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் இந்த ஆண்டுதேசிய அறிவியல் தினத்தை அறிவியல் திருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 75 நகரங்களில் பிப்.22 முதல் 28-ம் தேதி வரை 7 நாட்கள் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில் உள்ள அறிவியல், தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் 75 அறிவியல் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
மேலும், புத்தக கண்காட்சிகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. அறிவியல் திருவிழாவைக் காணவரும் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இத் திருவிழாவை நடத்த அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்வர வேண்டும். மாணவர்களுக்காக நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல்களை https://vigyanpujyate.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், பெரியார் மையத்தின் அறிவியல் அதிகாரி ஐ.கே.லெனின் தமிழ்கோவன், அறிவியல்பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.குமார் ஆகியோர் பங்கேற் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT