Published : 16 Feb 2022 07:36 AM
Last Updated : 16 Feb 2022 07:36 AM
தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (பிப்.17) மாலையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில், வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். தென்மாவட்டங் களில் குறிப்பாக பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் மும்முர மாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட் பாளர்களுடன், போட்டிபோட்டு சுயேச்சை வேட்பாளர்களும் வாக்காளர்களைக் கவரும் வகையில், பணத்தை தண்ணீராக செலவிடுகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிகம் செலவிடுவதாக சுயேச்சை வேட்பாளர்கள் கூறிவருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதில், பல வேட்பாளர்களின் உறவினர்களும், கட்சியினரும் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்கள். இதுபோல், பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் குறிப்பிட்ட சில வார்டுகளில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னரே வேட்பாளர்கள் சிலர் களத்தில் இறங்கிவிட்டனர். பித்தளை குத்துவிளக்கு, தாம்பாளம், டேபிள் ஃபேன், சீலிங்ஃபேன் என போட்டிபோட்டு வழங்குகிறார்கள். ஒருவர் 5 கிலோ அரிசி வழங்கினால், மற்றொருவர் 10 கிலோ அரிசி பையை வழங்கி வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஒரு வாக்கு க்கு ரூ.500 முதல் ரூ.2,000-ம் வரை கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வேட்பாளர்கள் உள்ளூர் சமுதாய கோயில்களுக்கு நன்கொடை வழங்கி, வாக்கு சேகரிக்கின்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணம், பரிசுப் பொருட்கள் விநியோகமும் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் செல்வந்தர்கள் ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கியுள்ளனர். ஒரு வேட்பாளர் தனது நகைக் கடையில் தங்க நகை வாங்கும் வார்டு மக்களுக்கு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைப்பு செய்யப்படும் என்றும், கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.300 முதல் ரூ.1,000 வரை விநியோகம் செய்துள்ளனர். வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று முதலில் வாக்குச்சாவடி சீட்டுகளை கொடுக்கின்றனர். சிறிது நேரத்தில் இந்த சீட்டுகள் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு மற்றொரு நபர் வந்து, அந்த சீட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் வீடுவீடாக பணம் விநியோகம் செய்தபோது ரூ.5,000 பணத்துடன் பிடிபட்டார். ஆனால், அவர் தனது சொந்தப்பணம் என்று கூறியதை அடுத்து, அவர் மீது வழக்கு ஏதும் பதியாமல் விட்டுவிட்டனர்.
நகராட்சி, பேரூராட்சி பகுதி களிலும் வேட்பாளர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். டிபன் பாக்ஸ், பாத்திரங்கள், அரிசிப்பை போன்றவற்றை விநியோகம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 28 டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் மேயரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் அங்குள்ள 52 வார்டுகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. மாநகராட்சி பகுதிகளில் பல வார்டுகளில் ஒரு வாக்குக்கு ரூ.500 முதல் ரூ.3,000 வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதால், பறக்கும் படையினரால் இதை கண்டுபிடித்து தடுக்க முடியவில்லை.
சுற்றுலா மையமான கன்னியாகுமரி பேரூராட்சியிலும் வார்டுகளை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரு தினங்களாக ஒரு வாக்குக்கு ரூ.2,000 வரை விநியோகம் நடைபெறுகிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளிலும், பண விநியோகம் பரவலாக நடந்து வருகிறது. செல்போன் செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதால், தடுக்கும் வழி தெரியாமல் பறக்கும் படையினர் திணறி வருகின்றனர்.
புகார்களே இல்லை
தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, “பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
ஆனால், வேட்பாளர்களிடம் இருந்தோ, பொதுமக்களிடம் இருந்தோ பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடா குறித்து, இந்நான்கு மாவட்டங்களின் கட்டுப்பாட்டு அறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை. வாக்காளர்கள் தரப்பிலும் பெரும்பாலும் பணம், பரிசுப்பொருட்களை கேட்டு வாங்குவதால், இதுபற்றிய தகவல் கிடைக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT