Last Updated : 27 Apr, 2016 09:14 PM

 

Published : 27 Apr 2016 09:14 PM
Last Updated : 27 Apr 2016 09:14 PM

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவருக்கு என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு

என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேனீஜெயக்குமார், திருமுருகன் ஆகியோருக்கு வாய்ப்பினை ரங்கசாமி வழங்கியுள்ளார். அதேநேரத்தில் அவரது சகோதரர் மகன் தமிழ்செல்வனுக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

புதுச்சேரியில் அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு மவுனமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பட்டியலை கட்சி அலுவலகத்தில் ரங்கசாமி வெளியிட்டார். முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கு அறிவித்தார்.

என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேனீ ஜெயக்குமார், திருமுருகன் ஆகியோருக்கு காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸில் ரங்கசாமி போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார். இதுவரை காங்கிரஸிலிருந்து விலகி அதிகாரப்பூர்வமாக என்.ஆர்.காங்கிரஸில் அவர்கள் இருவரும் சேரவில்லை.

முதல்வர் ரங்கசாமி இந்திரா நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது இந்திரா நகர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

இந்திராநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த ரங்கசாமியின் சகோதரர் மகன் தமிழ்செல்வனுக்கு இம்முறை முதல் பட்டியலில் வாய்ப்பு தரப்படவில்லை.

அதே நேரத்தில் நடப்பு நியமன எம்எல்ஏக்களான கட்சியின் நிர்வாகிகள் பாலன், என்.எஸ்.ஜே. ஜெயபால் ஆகியோரும் வேட்பாளராகியுள்ளனர்.

நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் சந்திரகாசுக்கு பதிலாக அவரது மகள் பிரியங்கா இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

எஸ்பி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பைரவசாமிக்கு ஏனாமில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏவான கல்யாணசுந்தரம் தனக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் நேற்று இரவு அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் அத்தொகுதி வேட்பாளர் முதல்பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x