Last Updated : 15 Feb, 2022 08:32 PM

 

Published : 15 Feb 2022 08:32 PM
Last Updated : 15 Feb 2022 08:32 PM

படித்த அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது: பழனிசாமி விமர்சனம்

திருச்சி: ”படித்த அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது” என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி திருச்சி மன்னார்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

”திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், கொள்ளைப்புற வழியாக வெற்றி பெற முயற்சி செய்கிறது. வேட்பாளர்களை அச்சுறுத்துவது, வழக்கு பதிவு செய்வது, தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் முடக்கப் பார்க்கின்றனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி வருகிறார். திமுகவின் மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம் அதிமுகவினர் எந்தக் காலத்திலும் அஞ்சமாட்டார்கள்.

9 மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் திமுக செய்யவில்லை. எனவே, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின் திணறுகிறார்.

காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவல் துறை நடுநிலையுடன், ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் திமுக அரசை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படித்த அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, இன்றும் நடைபெற்று வருகின்றன. ஆனால், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று அவதூறான பிரச்சாரத்தை, பச்சைப் பொய்யை மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பொய்ப் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்கினால், அது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றியதாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலினும் கூறுகின்றனர். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஓய்வூதிய உயர்வு, நகைக் கடன் ரத்து ஆகியவை எங்கே என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், எதற்கும் திமுகவிடம் பதில் இல்லை.

நீட் விவகாரத்தில் திமுக விடுத்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால், இதுவரை திமுகவிடம் பதில் இல்லை. 2010-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் என்ற நச்சு விதை தமிழ்நாட்டில் விதைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்தது. ஆனால், அதை மறைக்கின்றனர். அதேவேளையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து, சட்டமாக்கி அமல்படுத்தினோம். இதனால், 500-க்கும் அதிகமான கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் முழுமையாக அரசே ஏற்றது.

அதிமுக அரசு எப்போதும் மக்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் புரிந்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதலிடத்தில் உள்ளது. எனவே, மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையுடன் பணியாற்றி, வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், ஓ.எஸ்.மணியன், கு.ப.கிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, எஸ்.வளர்மதி, கேகே.பாலசுப்பிரமணியன், டி.பி.பூனாட்சி, ப.அண்ணாவி, என்.நல்லுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x