Published : 15 Feb 2022 06:46 PM
Last Updated : 15 Feb 2022 06:46 PM

'மேல்மட்ட சாலை அமைக்கலாம்' - திம்பம் மலைப்பாதை வாகனப் போக்குவரத்துக்கு தடை தொடரும்: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில், கனரக வாகனப் போக்குவரத்து காரணமாக விலங்குகள் பலியாவதாக கூறி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்க கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை பிப்ரவரி 10-ம் தேதி முதல் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரவுநேர போக்குவரத்து தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எம்எல்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது. அதை அமல்படுத்தும்படி மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டது. சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும். டேராடூன் - ஹரித்வார் இடையில் உள்ள சாலையில் யானைகள் கடப்பதால் விபத்துகளைத் தவிர்க்க மேல்மட்ட சாலை அமைக்கப்பட்டது. அதுபோல மேல்மட்ட சாலை அமைக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இரவு நேர போக்குவரத்து தடை உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மேலும் வாகன போக்குவரத்து தடை அமலில் உள்ள நேரத்தில் பள்ளிகள் ஏதும் செயல்படுவதில்லை என்று தெரிவித்தனர். மாற்று வழித்தடத்துக்கு ஏதும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி இடையீட்டு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x