Published : 15 Feb 2022 04:55 PM
Last Updated : 15 Feb 2022 04:55 PM
உதகை: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறையினரின் வாகனத்தை பயன்படுத்தி திமுக அரசு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை விநியோகம் செய்கிறது" என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது. இதற்கான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூடலூர், உதகை மற்றும் குன்னூரில் நடந்த கூட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
உதகை ஏடிசியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி வாக்கு சேகரித்தார். அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, "திமுக அரசு பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக அரசு விட்டுச் சென்ற திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகின்றனர்” என்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ”தேர்தல் வந்த உடன் திமுக அரசு கண்டிப்பாக காவல்துறை மூலமாக தன்னை விசாரணைக்கு அழைத்து ஏதாவது முடக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியபோது எனது வீட்டிலிருந்தோ, எனக்கு சம்பந்தபட்டவர்களின் வீட்டிலிருந்தோ பணமோ, எந்த ஆவணங்களை கைபற்றவில்லை. தேர்தல் நேரத்தில் அதிமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தவே, தனது நெறுங்கிய நண்பர்களின் நிறுவனங்களின் 110 கோடி டெபாசிட் தொகை முடக்கியுள்ளனர்.
இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி விநியோகம் செய்கின்றனர், காவல்துறையை திமுக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது” என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT