Published : 15 Feb 2022 03:36 PM
Last Updated : 15 Feb 2022 03:36 PM

வினோஜ் பி.செல்வம் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞரணித் தலைவரான வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கும் வகையிலும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் பி.செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வினோஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, மனுதாரர், இந்து முன்னணி அமைப்பின் கண்டனம் தொடர்பான செய்தியை, வெளியிட்ட நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டியே, ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, அந்தச் செய்தியை பகிர்ந்ததைத் தாண்டி அரசின் செயல்பாட்டை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த பதிவுக்கு, ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளையும் கவனத்தில் கொண்டே அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளுடன் மதத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து வினோஜ் பி.செல்வம் முன்ஜாமீன் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x