Published : 15 Feb 2022 05:36 AM
Last Updated : 15 Feb 2022 05:36 AM
சென்னை: 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடதேர்வுகள் நேற்று நடைபெற்றன. ஆனால், இந்த பாடங்களுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிறு) காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு தேர்வுகள் இணைஇயக்குநர் பொன்.குமார், திருவண்ணாமலையில் விசாரணை நடத்தினார்.
அதேபோல், நேற்று பிற்பகல் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு வினாத்தாளும் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்துதான் இந்த வினாத்தாள் வெளியாகியிருப்பது தெரிய வந்தது.
சென்னையில் 8 பள்ளிகளுக்கு நேற்றுகாலை 8 மணிக்கு அனுப்பப்பட்ட 10-ம்வகுப்பு வினாத்தாளுடன் பிளஸ் 2 வணிகவியல் வினாத்தாளும் சேர்த்து வழங்கப்பட்டிருப்பதும், அந்த பள்ளிகளில் இருந்துதான் வினாத்தாள் வெளியாகியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந் துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், ‘‘திருப்புதல் தேர்வை பொருத்தவரையில் இனிமேல் பள்ளிகளுக்கு வினாத்தாள் முன்கூட்டியே அனுப்பப்படாது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்பப்படும்’’ என்று தெரிவித் தார்.
2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள், தேர்வு நடைபெறும் முன்பு சமூக வலைதளங்களில் வெளிவந்ததன் அடிப்படையில் துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, ஹாசினி இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில்இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளின் நபர்கள் மீது குற்றவியல்நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT